

ஏடனில் சர்வதேச விமான நிலையத்துக்கு அருகே அமைந்துள்ள ராணுவ வளாகத்துக்குள் செவ்வாய்க்கிழமை இரட்டை கார் வெடிகுண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இதில் 10 பேர் பலியாகினர்.
இத்தாக்குதலுக்கு இதுவரை எந்த ஒரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இருப்பினும் ஜிஹாதிகள் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
குண்டு வெடிப்புக்குப் பின்னர் பாதுகாப்புப் படைகளுக்கும், தாக்குதல் நடத்தியவர்களுக்கும் இடையே சண்டை நடைபெற்றதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஏடன் தற்கொலைப்படை தாக்குதல் குறித்து பெயர் தெரிவிக்க விரும்பாத அதிகாரி ஒருவர் கூறும்போது, இத் தாக்குதலில் பலியானவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்றார்.
இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான ரம்ஜான் கொண்டாட்டத்தை சீர்குலைக்கும் நோக்கில் இத்தாக்குதல் நடைப்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த ஆண்டு புனித ரம்ஜான் மாதத்தில் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நோக்குடன் உலகம் முழுவதும் நிகழ்த்தப்பட்ட பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களில் 350 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.