

இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியா துணை நிற்கும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு குழுவினரிடம் இந்திய வெளியுறவுச் செயலர் சுஜாதா சிங் உறுதியளித்துள்ளார்.
இலங்கைத் தலைநகர் கொழும்பில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தலைமையிலான குழு கொழும்பு சென்றுள்ளது.
இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ள இந்திய வெளியுறவுச் செயலர் சுஜாதா சிங்கை தமிழ் தேசிய கூட்டமைப்புத் தலைவர் ஆர். சம்பந்தன் தலைமையிலான குழு வியாழக்கிழமை சந்தித்துப் பேசியது. இதன் பின்னர் செய்தியாளர்களிடம் சம்பந்தன் கூறியது:
கடந்த 1983 முதல் இலங்கை விவகாரங்களில் இந்தியா முக்கிய பங்கு வகித்து வருகிறது. இலங்கையில் வடக்கு, கிழக்கு பிராந்தியங்களில் வாழும் தமிழர்கள் சுயமரியாதையுடன் வாழவும் சட்டப்பூர்வ உரிமைகளை பெறுவதற்கும் இந்தியா முனைப்படன் செயல்பட்டு வருகிறது.
நிலஉரிமை அதிகாரம், தமிழர் பகுதிகளில் ராணுவ வீரர்கள் குவிப்பு, அடிக்கடி நடைபெறும் ராணுவ வீரர்களின் அத்துமீறல் சம்பவங்களால் தமிழர்கள் அச்சத்து டன் வாழ்கின்றனர். இவை உள்பட பல்வேறு விவகாரங்களில் உண்மை நிலவரத்தை சீர்தூக்கிப் பார்த்தால் நாங்கள் மிகுந்த ஏமாற்றத்தில் உள்ளோம். போர் படிப்பினை மற்றும் நல்லிணக்க ஆணையம் தனது பரிந்துரைகளை சமர்ப்பித்து 4 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் இதுவரை எந்தப் பரிந்துரையும் நிறைவேற்றப்படவில்லை. நில விவகாரம், போரின்போது காணாமல் போனவர்கள், சுதந்திரமான நீதித்துறை உள்பட எந்த கோரிக்கையையும் இலங்கை அரசு கண்டுகொள்வதாக இல்லை எனத் தெரிவித்தார்.
இந்திய வெளியுறவுச் செயலர் வாக்குறுதி
எங்களது குறைகள், கோரிக்கைகளை மிகுந்த அக்கறையுடன் கேட்ட இந்திய வெளியுறவுச் செயலர், இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியா துணை நிற்கும் என்று உறுதியளித்தார். தமிழர்கள் சுயமரியாதை, கெளரவத்துடன் வாழ்வதற்காக இந்தியா தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளும் என்றும் அவர் உறுதியளித்தார் என்றார் சம்பந்தன்.