

இந்தியாவை சுற்றுச்சூழல் பாதுகாப்பு வழியில் நாம் நம் நலன்களுக்காக திருப்ப வேண்டிய தேவையுள்ளது என்று அமெரிக்க அதிபர் ஒபாமா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
சிபிஎஸ் நியூஸ் ஊடகத்துக்கு ஒபாமா அளித்த நேர்காணலில் கூறும்போது, “நமது நலன்களுக்காக இந்தியா வளர்ச்சியடைய நாம் உதவ வேண்டும். நாங்கள் ஏழைகளாகவே இருக்க விரும்புகிறோம் என்று இந்தியா ஒருபோதும் தெரிவிக்கப்போவதில்லை. அவர்கள் கார்கள், ரெஃப்ரிஜிரேட்டர்கள், ஏர் கண்டிஷன்கள் என்ற பாதையில் செல்லவே விரும்புகின்றனர். சுருக்கமாக நம்மை போலவேதான் அவர்களும்.
எனவே, நாம் நம் நலன்களுக்காக அவர்களிடம் தெரிவிக்க வேண்டும், வழக்கொழிந்த, சுற்றுச்சூழல் நாச தொழில்நுட்பங்கள் அல்லாமல் மேலும் சுத்தமான, சுற்றுச்சூழல் நட்பான தொழில்நுட்பங்கள் நம்மிடம் உள்ளது, அதனை பெற்றுக்கொண்டு சீரிய வழியில் வளர்ச்சியடையுங்கள் என்று நாம்தான் அவர்களுக்கு உதவ வேண்டியுள்ளது. இதை ஏதோ அறக்கட்டளை சிந்தனை முறையில் கூறவில்லை. ஒரு விஷயத்தை நாம் ஒன்றுமே செய்ய முடியாது. பருவநிலை மாற்ற விளைவுகளை தடுக்க நாம் சுவர் எழுப்ப முடியாது என்பதே அது.
கார்பன் வெளியேற்றம் அல்லது உலக வெப்பநிலை அதிகரிப்பு, அல்லது கடல் நீர் மட்டம் ஆகிய விவகாரங்களில் நாம் எல்லைச் சுவர் எழுப்ப முடியாது. எனவே நாம் நம் நலன்களுக்காக சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஒட்டிய வளர்ச்சிக்கு உதவுவதே ஒரே வழி.
நாடுகள் தங்களது எரிசக்தி திட்டங்களை வளர்த்தெடுக்க நாம் ஏற்கெனவே நிறைய திட்டங்களை ஈடுபடுத்தியுள்ளோம். எனவே இதன் மூலம் வெள்ளம், வறட்சி, கடல் நீர்மட்டம் அதிகரித்தல், வேளாண்மை வளர்ச்சி ஆகிய விவகாரங்களில் நம்மிடம் திட்டங்கள் உள்ளன” என்றார்.
பாரீஸ் பருவநிலை மாற்றத்துக்கான ஐநா மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி ‘பருவநிலை மாற்ற நீதி’ குறித்து பேசி, புதைபடிவ எரிவாயுவைப் பயன்படுத்தி செல்வந்த நாடாக வளர்ச்சியுற்ற நாடுகள்தான் வளரும் மற்றும் ஏழை நாடுகளுக்கு சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்ததாத தொழில்நுட்பங்களை தந்து உதவ வேண்டும் என்ற தொனியில் கூறியிருந்ததை ஒபாமாவின் இந்த பேட்டியின் கருத்துகளுடன் ஒப்பு நோக்கிப் பார்க்கலாம்