

அமெரிக்காவில் ஆப்பிரிக்க-அமெரிக்கர் ஒருவரை போலீஸார் சுட்டுக் கொன்றதைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரங்களுக்கு ஹிலாரி பொறுப்பேற்க வேண்டும் என டிரம்ப் கூறியுள்ளார்.
பிலடெல்பியாவில் வியாழக்கிழமை தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய டொனால்டு டிரம்ப், "அமெரிக்காவில் நடந்து வரும் இனக் கலவரங்களுக்கு ஹிலாரி கிளின்டன் பொறுப்பேற்க வேண்டும். ஹிலாரியின் ஆதாரவோடுதான் கலவரங்கள் நடக்கின்றன" என்றார்.
முன்னதாக அமெரிக்காவில் சார்லோட் நகரத்தில் குற்றவாளி ஒருவரை பிடிப்பதற்காக போலீஸார் சென்ற பகுதியில் ஆப்பிரிக்க - அமெரிக்கரான கீத் ஸ்காட் கையில் துப்பாக்கியுடன் நின்றதாகக் கூறி போலீஸார் அவரை சுட்டுக் கொன்றனர்.
ஆப்பிரிக்க-அமெரிக்க இனத்தவர் போலீஸாரால் கொல்லப்பட்டதை எதிர்ந்து சாலையில் பேரணி சென்ற மக்கள். படம்: தி கார்டியன்
ஆனால் போலீஸாரின் குற்றச் சாட்டை மறுத்த ஸ்காட்டின் குடும்பத்தினர், ஸ்காட்டிடம் துப்பாக்கி இல்லை என்றும், போலீஸார் வேண்டும் என்றே ஸ்காட் மீது பழி சுமத்தி கொலை செய்துள்ளனர் .இதற்கு நீதி வேண்டும் என்று கூறி சாலையில் இறங்கி போராட்டம் நடத்தினர். இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். அப்போது அங்கு வெடித்த கலவரத்தில் 20 போலீஸார் காயம் அடைந்தனர்.
இந்த நிலையில், போராட்டத்தை கட்டுக்குள் கொண்டு வர சார்லோட் பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.