

இலினாய்ஸில் உள்ள மாவட்ட நீதிமன்ற பதவிக்கு அரசு வழக்குரைஞராக உள்ள இந்திய-அமெரிக்கரான மணீஷ் ஷா (40) என்பவரைத் தேர்வு செய்து கௌரவித்துள்ளார் அதிபர் பராக் ஒபாமா.
இலினாய்ஸிலுள்ள அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்துக்கு மணிஷ் எஸ். ஷா நியமிக்கப்பட்டுள்ளார். அவருடன் மற்ற முக்கிய நீதித்துறை பதவிகளுக்கும் ஏராளமானோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சட்டப்பணிகளில் தனி முத்திரை பதித்து புகழ்பெற்ற இவர்கள், மத்திய நீதிபதி அமர்வுகளில் அமர்ந்து பணியாற்ற இந்த பதவி தரப்படுகிறது. அவர்கள் பாரபட்சம் காட்டாமல் நீதி வழங்கி நேர்மையுடன் சேவையாற்றுவார்கள் என வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் ஒபாமா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
நியூயார்க்கில் பிறந்தவர் ஷா
2001-ம் ஆண்டிலிருந்து இலினாய்ஸ் வடக்கு மாவட்டத்தில் அமெரிக்க நிர்வாகத்தின் உதவி வழக்குரைஞராக பணியாற்றியவரான ஷா, தற்போது குற்றப் பிரிவுக்கு தலைமை வகித்து வருகிறார். இந்த பதவிக்கு வருவதற்கு முன் 2011 முதல் 2012 வரையில் கிரிமினல் அப்பீல் நீதிமன்றத்தில் தலைவராக இருந்தார்,
2008 முதல் 2011ம் ஆண்டு வரையில் நிதிக்குற்றங்கள் மற்றும் சிறப்பு வழக்கு தொடுப்புப் பிரிவின் துணைத்தலைவராக பதவி வகித்தார். 2007லிருந்து 2008 வரையில் பொதுக்குற்றங்கள் பிரிவுக்குத் தலைமை வகித்தார்.
மணீஷ் ஷாவை மாவட்ட நீதிமன்ற நீதிபதியாக ஒபாமா நியமித்துள்ளதை வரவேற்றுள்ளார் செனட் உறுப்பினர் மார்க் கிர்க். மற்றொரு செனட் உறுப்பினரான டிக் டர்பினும் வரவேற்றுள்ளார்.
மணீஷின் பெற்றோர் இந்தியா விலிருந்து குடியேறியவர்கள். கனக்டிகட்டில் உள்ள வெஸ்ட் ஹார்ட்போர்ட் நகரில் மணீஷ் உள்ளிட்ட இரு குழந்தைகளும் வளர்ந்தனர். ஷா, அவரது மனைவி ஜோனா கிரிசிங்கர் சிகாகோவில் வசிக்கின்றனர். நார்த்வெஸ்டன் பல்கலையில் ஆசிரியராக ஜோனா பணியாற்றுகிறார்.