

இராக் தலைநகர் பாக்தாத் உள்பட பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை நிகழ்ந்த தீவிரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதாக பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதில் அதிகபட்சமாக பாக்தாத்நகரின் மேற்குப் பகுதியில் உள்ள சன்னி பிரிவினர் அதிகம் வசிக்கும் அபு க்ரெய்ப் பகுதியில் நடைபெற்ற வன்முறையில் 8 பேர் இறந்தனர். சோதனைச் சாவடி ஒன்றின் மீது தீவிரவாதிகள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில் 6 ராணுவ வீரர்களும், மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையில் குண்டு வெடித்ததில் 2 பேரும் இறந்தனர்.
மேலும் பாக்தாத் நகரின் 2 வெவ்வேறு பகுதிகளில் தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் ராணுவ முன்னாள் ஜெனரல் உட்பட 4 பேர் இறந்தனர். வன்முறை அதிக அளவில் நிகழும் பகுபா மற்றும் மோசுல் ஆகிய பகுதிகளில் அதிகாரிகளைக் குறிவைத்து நடத்திய தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர்.
கிர்குக் நகரில் 3 கார் வெடி குண்டுகள் வெடித்ததில் 4 பேரும் மிஷாதா நகரில் கார் குண்டு வெடித்ததில் 3 பேரும் இறந்தனர். பலுஜா நகரில் உள்ள ஒரு வீட்டில் குண்டு வெடித்ததில் ஒரு பெண் மற்றும் அவரது 3 குழந்தைகள் கொல்லப்பட்டதாக மருத்துவர் ஒருவர் தெரிவித்தார்.
இதன்மூலம் இராக்கில் இந்த மாதத்தில் மட்டும் தீவிரவாத தாக்குதலுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 850 ஆக அதிகரித் துள்ளது. இது கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தைவிட 3 மடங் குக்கும் அதிகம் ஆகும். சிரியாவை ஒட்டி அமைந்துள்ள அன்பர் மாநிலத்தில் சன்னி பிரிவினர் அதிக அளவில் வசிக்கின்றனர். இப்பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் அல்-காய்தா அமைப்புடன் தொடர்புடைய ஐஎஸ்ஐஎல் அமைப்புக்கும் இடையே அடிக்கடி மோதல் நடைபெறுவதே இந்த வன்முறைக்குக் காரணம்.
இந்த வன்முறை காரணமாக அப்பகுதியைச் சேர்ந்த சுமார் 1.4 லட்சம் பேர் வேறு இடங்களுக்கு புலம் பெயர்ந்துள்ளதாக ஐ.நா. அமைப்பு தெரிவிக்கிறது. இது இன மோதல் உச்சத்தில் இருந்த 2006-08-ல் இருந்த அளவைவிட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.