ஐக்கிய அரபு அமீரகத்தில் போலி வீடியோ, வதந்தி பரப்பியதாக 19 இந்தியர்கள் கைது

Updated on
1 min read

அபுதாபி: ஐக்கிய அரபு அமீரகத்தில் போர் தொடர் பாக போலி வீடியோ, வதந்திகளை பரப்பியதாக 19 இந்தியர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் மற்றும் ஈரான் ராணுவத்துக்கு இடையே நேற்று 17-வது நாளாக போர் நீடித்தது. இந்த போரால் ஒட்டுமொத்த மத்திய கிழக்கு நாடுகளும் பாதிக்கப்பட்டு உள்ளன. ஐக்கிய அரபு அமீரக தலைநகர் அபுதாபி, துபாய் உள்ளிட்ட பகுதிகளில் அமெரிக்க விமானப் படை தளங்கள் செயல்படுகின்றன. இந்த தளங்களை குறிவைத்து ஈரான் ராணுவம் தொடர்ந்து ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்களை நடத்தி வருகிறது.\

மேலும் துபாய் விமான நிலையம், நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் புஜாயிரா துறைமுகத்தின் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தியிருக்கிறது. இந்நிலையில் அமீரகத்தில் வசிக்கும் வெளி நாட்டினரில் சிலர் போர் தொடர்பாக சமூக வலைதளங்களில் போலி வீடியோ, வதந்திகளை பரப்பியதாக புகார்கள் எழுந்தன.

இது தொடர்பாக 19 இந்தியர்கள் உட்பட 35 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்கள் மீது நீதிமன்றங்களில் விசாரணை நடைபெற உள்ளது. பாதுகாப்பு ரகசியங்கள், ராணுவ நடவடிக்கைகள் மற்றும் போலி வீடியோ, வதந்திகளை சமூக வலைதளங்களில் பரப்பக்கூடாது என்று அமீரக அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது.

இதை மீறி போர் தொடர்பாக சமூக வலைதளங்களில் வீடியோ, பதிவுகளை வெளியிட்டோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஓராண்டு சிறை, ரூ.25 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று அமீரக சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் போலி வீடியோ, வதந்தி பரப்பியதாக 19 இந்தியர்கள் கைது
ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து இந்திய காஸ் டேங்கர் கப்பல் ‘ஷிவாலிக்’ முந்த்ரா துறைமுகம் வந்தடைந்தது எப்படி?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in