

பிரிட்டன் நாடாளுமன்றம் அருகே நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 5 பேர் பலியாக, 40 பேர் காயமடைந்துள்ளனர், பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
லண்டனில் உள்ள பிரிட்டன் நாடாளுமன்றம் அருகே வெஸ்ட்மின்ஸ்டர் பிரிட்ஜில் மர்ம நபர் ஒருவர் மக்கள் கூட்டத்தினுள் காரைச் செலுத்தியதோடு போலீஸ் அதிகாரி ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்தது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் தாக்குதல் நடத்திய நபர் உட்பட 5 பேர் பலியாகியுள்ளனர். சுமார் 40 பேர் காயமடைந்துள்ளனர்.
ஜூலை 7, 2005-க்குப் பிறகு பிரிட்டனில் இத்தகைய பயங்கரவாதத் தாக்குதல் நடைபெற்றுள்ளதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தீவிரவாதி தனியாகவே வந்ததாகவும் வெஸ்ட்மின்ஸ்டர் பிரிட்ஜில் மக்கள் கூட்டத்திடையே காரைச் செலுத்தி பயணிகள் பலர் மீது ஏற்றியுள்ளார். மக்கள் அலறியடித்துக் கொண்டு உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடிய நிலையில் வெஸ்ட்மின்ஸ்டர் அரங்கின் நுழைவாயிலுக்குள் புகுந்தது கார், பிறகு போலீஸ் அதிகாரியை பெரிய கத்தியால் மீண்டும் மீண்டும் குத்திக் கொலை செய்தார். அந்த போலீஸ் அதிகாரியின் பெயர் பி.சி.கெய்த் பால்மர், வயது 48 என்பது குறிப்பிடத்தக்கது.
உதவி கமிஷனர் (பொறுப்பு), மார்க் ரவ்லே கூறும்போது, இது ‘இஸ்லாமிய தொடர்பான பயங்கரவாத் தாக்குதல்’ என்றார்.
தாக்குதலை அடுத்து பிரிட்டன் பிரதமர் தெரசா மே அவசரக்கூட்டம் கூட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்துள்ளார், ‘இந்தத் தாக்குதல் கோழைத்தனமானது, நாடாளுமன்ற மதிப்பீடுகளை குலைக்கும் முயற்சிகள் தோற்கடிக்கப்படும்’ என்று கூறியதோடு போலீஸ் அதிகாரிகளின் தைரியத்தைப் பாராட்டினார்.
உலகத்தலைவர்கள் இந்த பயங்கரவாதத் தாக்குதலை வன்மையாகக் கண்டித்துள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி தனது கண்டனத்தில், “லண்டன் தாக்குதல் கடும் துயரத்தை அளிக்கிறது. எங்கள் எண்ணங்களும், பிரார்த்தனைகளும் பலியானவர்கள் மற்றும் அவரது குடும்பத்தினரைச் சுற்றியே உள்ளன, இந்த கடினமான தருணத்தில் இந்தியா பிரிட்டன் பக்கம் உறுதுணையாக நிற்கும்” என்று பதிவிட்டுள்ளார்.