

தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு பற்றி முடிவு செய்ய நாடாளுமன்றம்தான் சிறந்த அமைப்பு என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்திடம், இலங்கை அதிபர் ராஜபக்ஷே தெரிவித்தார்.
அரசு முறைப்பயணமாக இலங்கை சென்றுள்ள சல்மான் குர்ஷித், மாகாண அரசுகளுக்கு அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், அதிபர் ராஜபக்ஷவை கொழும்பில் உள்ள அதிபர் மாளிகையில் சல்மான் குர்ஷித் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார்.
இது தொடர்பாக இலங்கை அதிபர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
அதிகாரப் பகிர்வு குறித்து சல்மான் குர்ஷித்திடம், பேசிய ராஜபக்ஷே, நாடாளுமன்றத் தேர்வுக் குழு, சம்பந்தப்பட்டவர்களுடன் பேச்சு நடத்தி, மக்கள் விரும்பும் தீர்வை முன்வைக்கும்' என்றார்.
இந்த சந்திப்பின்போது, இந்திய – இலங்கை தொடர்பான பொதுநலன் சார்ந்த விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டன. முக்கிய விவகாரங்களில் ஒத்துழைப்பு அளித்து, இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இருவரும் விவாதித்தனர்.
வடக்கு மாகாணத்தில் வெற்றிகரமாக தேர்தலை நடத்தி முடித்ததற்காக ராஜபக்ஷவை சல்மான் குர்ஷித் பாராட்டினார். இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பின்னர், தமிழக மீனவர்கள் இலங்கையால் கைது செய்யப்படும் சம்பவங்கள் குறித்து இருவரும் விவாதித்தனர். இருநாடுகளைச் சேர்ந்த மீனவர்கள் இடையே பேச்சுவார்த்தைக் கூட்டங்களை நடத்துவதே தீர்வு காண்பதற்கான சிறந்த வழி என்பதை இருவரும் ஒப்புக்கொண்டனர்.
இருதரப்பு வர்த்தக உறவுகளை மேம்படுத்த தொழில்துறையைச் சேர்ந்த பிரதிநிதிகள் சந்தித்துப் பேச ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.