

இலங்கை விவகாரம் குறித்து முன்கூட்டியே சர்வதேச விசாரணை நடத்த முயற்சிக்க வேண்டும் என்று பிரிட்டன் தொழிலாளர் கட்சி நிழல் வெளியுறவுத் துறை அமைச்சர் டக்ளஸ் அலெக்சாண்டரிடம் இலங்கைத் தமிழர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
பிரிட்டனில் அமைச்சரவை மேற்கொள்ளும் பணிகள், திட்டங்கள், கொள்கைகளை விமர்சித்து மாற்றுக் கொள்கைகளை முன்வைக்கும் வகையில் பிரதான எதிர்க்கட்சித் தரப்பில் நிழல் அமைச்சரவை செயல்படுகிறது. இப்போதைய பிரதான எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி சார்பில் வெளியுறவுத் துறைக்கான நிழல் அமைச்சராக டக்ளஸ் அலெக்சாண்டர் உள்ளார்.
சமீபத்தில் காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பதற்காக இலங்கை சென்ற பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன், போர்க் குற்றம் தொடர்பாக வரும் மார்ச் மாதத்துக்குள் இலங்கை அரசு தானாக முன்வந்து விசாரணை நடத்த வேண்டும். இல்லாவிட்டால், சர்வதேச அளவிலான சுதந்திரமான விசாரணையை நடத்த ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையத்தின் மூலம் பிரிட்டன் நடவடிக்கை எடுக்கும் என்று எச்சரித்திருந்தார்.
இது தொடர்பாக பிரிட்டனில் செயல்படும் இலங்கை தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகள் அலெக்சாண்டரை கடந்த வெள்ளிக்கிழமை சந்தித்தனர். அப்போது, மார்ச் வரை காலக்கெடு வழங்காமல், அதற்கு முன்னதாகவே சர்வதேச விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்கும்படி பிரதமர் கேமரூனை வலியுறுத்த வேண்டும் என்று தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகள் வேண்டுகோள் விடுத்தனர்.
விரைவில் டேவிட் கேமரூனை சந்தித்து, இலங்கை போர்க் குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணையை மார்ச் மாதத்துக்கு முன்னதாக மேற்கொள்ள வலியுறுத்துவேன் என்று அலெக்சாண்டர் உறுதியளித்தார்.
பிரிட்டனில் செயல்படும் தமிழ் தகவல் மையம், உலக தமிழ்ப் பேரவை, தமிழ் தொழிலாளர்கள் அமைப்பு, இனப்படுகொலைக்கு எதிரான தமிழர்கள் அமைப்பு, பிரிட்டிஷ் தமிழர் பேரவை, தமிழ்த் தேசிய கூட்டணி, தமிழ் இளைஞர்கள் அமைப்பு ஆகியவற்றின் பிரதிநிதிகள் இந்த சந்திப்பில் பங்கேற்றனர்.