

இரண்டு மீனவர்கள் கொலை வழக்கில் 2 இத்தாலிய கடற்படை வீரர்கள் விசாரணையை எதிர் கொண்டு வரும் பிரச்சினையை இந்தியா வுடன் பேசித் தீர்க்குமாறு இத்தாலியிடம் ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த விவகாரத்தை சர்வதேச மயமாக்க முயன்ற இத்தாலிக்கு இது மிகப்பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது.
“இந்தப் பிரச்சினையில் ஐ.நா. தலையிடுவதை விட, இருதரப்பு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதே சிறந்தது” என்று பான் கி மூன் கூறியதாக இத்தாலியின் அன்சா செய்தி நிறுவனம் கூறியுள்ளது. பான் கி மூனின் இந்தக் கருத்துக்கு இத்தாலியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
பானின் இந்த அறிவிப்பு தனக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளதாக இத்தாலிய வெளியுறவு அமைச்சர் எம்மா பொனினோ அந்நாட்டு நாடாளுமன்றத்தில் கூறினார். எனினும் இந்த விவகாரத்தில் உரிய கவனம் செலுத்துவதாகவும், இந்திய அதிகாரிகள் மீது பின்னர் நடவடிக்கை எடுப்பதாகவும் பான் கீ மூன் உறுதி அளித்துள்ளார் என்றார் அவர்.
கேரள கடற்பகுதியில் 2012 பிப்ரவரியில் 2 கேரள மீனவர்கள் 2 இத்தாலிய கடற்படை வீர்ர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை இந்தியா – இத்தாலி இடையிலான உறவில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.