Last Updated : 03 Feb, 2017 12:32 PM

 

Published : 03 Feb 2017 12:32 PM
Last Updated : 03 Feb 2017 12:32 PM

அகதிகளுக்கு எதிரான ட்ரம்பின் வெறுப்புப் பேச்சு: அமைதிக்கான நோபல் வென்றவர்கள் கண்டனம்

அகதிகளுக்கெதிரான அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் வெறுப்பு பேச்சை, அமைதிக்கான நோபல் பரிசு வென்ற ஜுவான் மேனுவல் சண்டோஸ் உள்ளிட்ட பலர் வன்மையாக கண்டித்துள்ளனர்.

உள்நாட்டு யுத்தத்தை நடத்திக்கொண்டிருந்த எஃப்.ஏ.ஆர்.சி. கொரில்லா குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தி அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்தியதற்காக அமைதிக்கான நோபல் பரிசு கொலம்பிய அதிபர் ஜுவான் மேனுவல் சண்டோஸ்க்கு வழக்கப்பட்டது.

அமைதிக்கான நோபல் பரிசு வென்றவர்களுக்கான நான்கு நாள் மாநாடு கொலம்பியாவின் தலைநகர் போகோடாவில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் சமீபத்தில் மெக்ஸிகோ மற்றும் முஸ்லிம் மக்களுக்கு எதிராக அமெரிக்க அதிபர் மேற்கொண்ட நடவடிக்கை குறித்து, ட்ரம்பின் பெயரை குறிப்பிடாமல் மறைமுகமாக விமர்சித்தார் சண்டோஸ்.

ஜுவான் மேனுவல் சண்டோஸ் கூறும்போது, "வெறுப்பு பேச்சின் மூலம், பாரபட்சமும், அகதிகள் பிரச்சினையும், புலம்பெயர்ந்தவர்களை நிராகரிக்கும் அபத்தமும் பயத்தின் பிடியில் இருக்கும் உள்ளங்களை வெற்றிக் கொண்டுவிட்டதாக கருதும்போது, மனிதம் பற்றி இங்கே பேசுவதற்கு என்ன இருக்கிறது?" என்றார்.

இதேபோல், அமைதிக்கான நோபல் பரிசு வென்ற ஏமன் நாட்டைச் சேர்ந்த தவாக்கோல் கர்மன்னும் ட்ரம்பின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தார்.

கோஸ்டா ரிகா நாட்டின் அதிபர் ஆஸ்கர் அரைசா, சமூக ஆர்வலர் ஜோடி வில்லியம்ஸ் ஆகியோரும் ட்ரம்பின் நடவடிக்கையை விமர்சித்தனர்.

ட்ரம்ப் ஒப்புதல் அளித்துள்ள அகதிகள் கொள்கை

ட்ரம்ப் பிறப்பித்துள்ள புதிய உத்தரவின்படி, சிரிய அகதிகளுக்கு விசா வழங்கப்படுவது உடனடியாக நிறுத்தப்படுகிறது. ட்ரம்ப்பிடம் இருந்து மறு உத்தரவு வரும்வரை சிரியர்களுக்கு அமெரிக்க விசா கிடையாது. தற்போது, பரிசீலனையில் இருக்கும் விசா படிவங்கள்கூட கருத்தில் கொள்ளப்படாது.

மேலும், பார்டர் ரெஃப்யூஜி புரோகிராம் எனப்படும் எல்லையில் காத்திருக்கும் அகதிகள் நிரந்தரமாக அமெரிக்காவில் குடியேறுவதற்கான திட்டத்தை 4 மாதங்களுக்கு நிறுத்தி வைத்துள்ளார்.

இது முஸ்லிம்களை அமெரிக்காவுக்குள் வரவிடாமல் ட்ரம்ப் நிகழ்த்தும் கெடுபிடி என விமர்சனங்கள் எழுந்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x