

ஆஸ்கர் விருது பெற்ற ஹாலிவுட் இயக்குனரான ஆலிவர் ஸ்டோன் பிரபலமான வீடியோ கேமான 'போகிமேன் கோ' விளையாட்டை, பிரைவசியை முழுமையாக அழிக்கவல்ல செயலி என்று தெரிவித்திருக்கிறார்.
சான் டியாகோவில் தன்னுடைய புதிய படமான 'ஸ்னோடன்' விளம்பரத்தின் போது பேசிய ஆலிவர் ஸ்டோன்,
"இந்த விளையாட்டு வேடிக்கையானது அல்ல. இது ஒரு கண்காணிப்பின் கீழ் இயங்கி வருகிறது. இதன் மூலம் இந்த கேமைப் பயன்படுத்துபவர்களின் முழு விவரத்தையும் உங்கள் தொலைபேசியில் இருந்து ஸ்கேன் செய்யலாம்.
இப்போதெல்லாம் புதிய படைப்புகளின் தன்மை வேறொரு பரிமாணத்தில் உள்ளது. இது போன்ற வீடியோ கேம்களால் கூகிள் நிறுவனத்திற்கு லாபம் அதிகரித்து வருகிறது.
இதன்மூலம் நீங்கள் என்ன விரும்புவீர்கள், எவற்றை வாங்குவீர்கள், உங்களின் நடத்தை குறித்து மற்றவர்களால் அறிய முடியும். இதனால் கூகுள் நிறுவனம் இத்தகைய தரவு சுரங்கத்தை உருவாக்க அதிக அளவு பணத்தை செலவிட்டுள்ளது.
கண்காணிப்பின் கீழ் உட்படுத்துகிற இதுவும் ஒருவகையான சர்வாதிகாரம்தான். இந்த விளையாட்டு ரோபோ சமுதாயத்தையே உருவாக்கும்" என்று தெரிவித்துள்ளார்.
ஆலிவர் ஸ்டோன் 'சாவேஜஸ்' உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆலிவர் ஸ்டோன்