Published : 21 Oct 2014 10:49 AM
Last Updated : 21 Oct 2014 10:49 AM

உலக மசாலா: செல்லப் பிராணி பராமரிப்புக்கு 50 ஆயிரம் சம்பளம்

உலகம் முழுவதும் ‘அயர்ன்மேன்’ போட்டிகள் நடைபெறுகின்றன. ஆனால் ஹவாய் தீவில் நடைபெறும் அயர்ன்மேன் உலக சாம்பியன் போட்டி சற்று வித்தியாசமானது. இதில் பங்கேற்கும் போட்டியாளர்கள் 2.4 கி.மீ. தூரத்துக்குத் தண்ணீரில் நீந்த வேண்டும். 112 மைல் தூரத்துக்கு சைக்கிளில் பயணம் செய்ய வேண்டும். 26.2 மைல் தூரம் மராத்தான் ஓட வேண்டும்.

இந்த மூன்று போட்டிகளையும் வெற்றிகரமாக முடிப்பவரே உலக சாம்பியன் பட்டத்தைப் பெறுவார். கடினமான இந்தப் போட்டிகளை 17 மணி நேரங்களுக்குள் முடிக்க வேண்டும். 2,184 போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்தப் போட்டியில் அலெக்ஸ் ஸனார்டி என்ற முன்னாள் கார் பந்தய வீரர் கலந்துகொண்டார். விபத்தில் இரண்டு கால்களையும் இழந்த அலெக்ஸ், அயர்மேன் போட்டியில் கலந்துகொண்டு, மூன்று போட்டிகளையும் நிறைவு செய்தார்!

நிஜமான இரும்பு மனிதர்!



சீனாவில் செல்லப் பிராணிகளைப் பராமரிப்பவர்களின் தேவை அதிகரித்து வருகிறது. இந்தத் துறையில் 15 சதவிகித பராமரிப்பாளர்களே தற்போது இருப்பதால், அவர்களின் சம்பளம் மிக அதிகமாக இருக்கிறது! அதாவது மாதம் 50 ஆயிரம் ரூபாய் சம்பளம் பெறுகிறார்கள். நாய்களுக்கான திருமண நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. தொலைக்காட்சியில் அதனைக் கண்ட பிறகு, நாய் வளர்ப்பில் அதிக ஆர்வத்தைச் சீனர்கள் காட்டி வருகிறார்கள். பராமரிப்பாளர்களின் தேவை மேலும் அதிகரித்துள்ளது!

நாய் வளர்த்த காசு குரைக்காது!



நியூயார்க் நகரில் பெரும்பாலான பள்ளிகளில் மொபைல் போன் பயன்பாட்டுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் எலக்ட்ரானிக் பொருள்கள் பாதுகாப்பு மையங்கள் ஆரம்பிக்கப்பட்டு, புது பிசினஸாக வளர்ந்து வருகிறது. ஒரு டாலர் கட்டணத்தில் போனைக் கொடுத்துவிட்டு, பள்ளி முடிந்ததும் பெற்றுச் செல்கிறார்கள். எனவே பள்ளியில் மொபைல் போனுக்கான தடை விரைவில் நீக்கப்படும், வகுப்பறையில் மட்டும் பயன்பாட்டுக்குத் தடை இருக்கும் என்கிறார்கள்.

நாகாக்க அப்டிங்கறது மொபைலுக்கும் பொருந்தும்!



18 கிலோ எடை கொண்ட பிக்கி பூனைக்கு உடல் எடையால் ஏகப்பட்ட பிரச்னைகள். கலிஃபோர்னியாவில் உள்ள கால்நடை மருத்துவர் எமி கார், குடல் அறுவை சிகிச்சை செய்தால்தான் காப்பாற்ற முடியும் என்று கூறிவிட்டார். ஆனால் பிக்கியை வளர்ப்பவரிடம் அவ்வளவு பணம் இல்லை. நீண்ட தேடுதலுக்குப் பிறகு, இரண்டு ஸ்பான்சர்கள் கிடைத்தனர். குடல் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்தது. பிக்கி எதிர்பார்த்ததை விட நன்றாகத் தேறி வருவதாக மருத்துவர்கள் சொல்கிறார்கள்.

அதிக எடை ஆபத்து!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x