

பாகிஸ்தான் ராணுவத்தின் புதிய தலைமை தளபதியாக ஜெனரல் ரஹீல் ஷெரீப் (57) வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.
ராவல்பிண்டியில் உள்ள ராணுவ தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கீழ் நீண்ட காலம் தலைமை தளபதியாக இருந்த ஜெனரல் அஷ்பக் பர்வேஸ் கயானி, ஷெரீபிடம் முறைப்படி பொறுப்பை ஒப்படைத்தார்.
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், சுமார் 6 லட்சம் வீரர்களைக் கொண்ட ராணுவத்தின் 15-வது தலைமை தளபதியாக ரஹீல் ஷெரீபை புதன்கிழமை நியமித்தார்.
சுதந்திரத்துக்கு பிந்தைய 66 ஆண்டு கால பாகிஸ்தான் வரலாற்றில் பெரும்பாலும் ராணுவ ஆட்சியே நடைபெற்றுள்ளதால், ராணுவ தலைமை தளபதி பதவி மிகவும் அதிகாரம் மிக்கதாகக் கருதப்படுகிறது.
ஹிலால்-ஐ-இம்தியாஸ் விருது பெற்றவரான ஜெனரல் ஷெரீப், கடந்த 1971-ல் இந்தியாவுடன் நடைபெற்ற போரில் உயிரிழந்த மேஜர் ஷாபிர் ஷெரீபின் இளைய சகோதரர் ஆவார்.