

கலிபோர்னியாவின் ஏதன் டீன் என்ற ஆறு வயது சிறுவன் துப்புரவுத் தொழிலாளியாக நகரை வலம் வந்து அனைத்து தரப்பு மக்களின் அன்பையும் பெற்றுள்ளார்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வசித்து வருபவர் கென் டீன். இவருக்கு ஏதன் டீன் என்ற ஆறு வயது மகன் உள்ளார். நுரையீரல் சுவாசக் கோளாறு மற்றும் உணவு செரிமான பிரச்சனையில் ஏற்பட்ட சிக்கலின் காரணமாக கடந்த ஐந்து ஆண்டுகளாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் ஏதன் டீன்.
"அப்பா என் நண்பர்களுக்கும், தங்கைக்கும் ஏன் எனக்கு அளிக்கப்படும் சிகிச்சை அளிக்கப்படவில்லை" என்று தன் மழலை மாறாத குரலில் தன் தந்தையிடம் கேட்டு வந்துள்ளார். இதற்கெல்லாம் கென் டீன்னின் பதில் மவுனமாக இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் ஏதனின் மருத்துவ செலவுக்கு உதவி வரும் தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று கடந்த பிப்ரவரி மாதம் குழந்தைகளுக்கான சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. இதில் பங்கேற்ற குழந்தைகளிடம் நீங்கள் எதிர்காலத்தில் என்னவாக ஆக ஆசைப்படுகிறிர்கள்? நீங்கள் யாரை சந்திக்க விரும்புகிறிர்கள்? உங்களது ஆசைகள் என்ன? போன்ற கேள்விகள் கேட்டுள்ளார்கள்.
தொண்டு நிறுவனம் கேட்ட அனைத்திற்கும் ஏதன் கூறிய பதில் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் ஏதனிடமிருந்து வந்த ஒரே பதில் “துப்புரவுத் தொழிலாளி” என்பது மட்டுமே.
ஏதனின் விருப்பத்தை நிறைவேற்ற அத்தனியார் தொண்டு நிறுவனம் முடிவு செய்தது.
ஏதனின் தந்தையின் பங்களிப்போடு ஏதனின் பிறந்த நாளான நேற்று (செவ்வாய்கிழமை) அவனது துப்புரவுத் தொழிலாளியாகும் ஆசையை நிறைவேற்றியுள்ளனர்.
ஏதனின் வீட்டின் முன் 'ஏதனின் வாகனம்' என்று எழுதப்பட்டு அலங்கரிக்கப்பட்ட துப்புரவு வாகனத்தைக் கண்டதும் ஏதன் துள்ளிக் குதித்துள்ளான்.
அவனைத் தூக்கிய துப்புரவு அதிகாரிகள் அவனது தலையில் துப்புரவுத் தொழிலாளிகள் பயன்படுத்தும் தொப்பியை அணிவித்துள்ளனர்.
தலையில் தொப்பியுடன் துப்புரவு வாகனத்தின் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்திருந்த ஏதனை சாலையின் இரு பக்கங்களிலிருந்து மக்களுடன், அவனது பெற்றோரும் இணைந்து கன்ணீர் மல்க மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
ஏதனின் வாகனத்தை வரவேற்கும் கலிபோர்னிய நகர வாசிகள்
துப்புரவு வாகனத்தில் வலம் வந்ததுடன் மட்டுமல்லாது ஏதன் பல முக்கிய பிரமுகர்களுடனும் உணவு விருந்தில் கலந்து கொண்டுள்ளார். இவ்வாறு தான் விரும்பிய கனவு நாளை முடித்திருக்கிறார் ஏதன்.
ஏதனின் இம்மகிழ்ச்சியான தருணத்தை உருவாக்கிய தனியார் தொண்டு நிறுவனத்திற்கு சமூக வலைதளங்களில் அனைத்து தரப்பு மக்களிடமும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.