

மும்பை தீவிரவாதத் தாக்குதலின் போது தாஜ் மஹால் பேலஸ் ஹோட்டலில் தங்கியிருந்த பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த வில் பைக் என்பவர் காயமடைந்து பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்.
அந்த ஹோட்டலின் உரிமையா ளர்கள் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவில்லை என குற்றம்சாட்டி பிரிட்டனில் உள்ள உயர் நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த வில் பைக் (33), தனது பெண் நண்பருடன் 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி தாஜ் மஹால் ஹோட்டலில் தங்கியிருந்தார். தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தத் தொடங்கியதையடுத்தும், தீ விபத்து ஏற்பட்டதையடுத்தும், இருவரும் ஜன்னல் வழியே தப்பிச் செல்ல முயன்றனர். இதில், கீழே விழுந்து வில் பைக் படுகாயமடைந்தார். அதனால் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டார்.
இந்நிலையில், ஹோட்டல் நிர்வாகத்தின் மீது வில் பைக் சிவில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவரின் வழக்கறிஞர் ரஸ்ஸல் லெவி கூறியதாவது:
“2008-ம் ஆண்டு சிஎன்என் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் டாடா குரூப்பின் தலைவர், இந்த தாக்குதல் குறித்து தங்களுக்கு முன்பே எச்சரிக்கை வந்திருந்த தாகத் தெரிவித்தார். ஹோட்டல் மீது தாக்குதல் நடத்தப்படும் என்ற எச்சரிக்கை வந்த பின்பும், தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை அந்த நிறுவனத்தினர் செய்யவில்லை” என்றார்.
இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வது குறித்து வரும் டிசம்பர் 2-ம் தேதி உயர் நீதிமன்றம் முடிவு செய்யவுள்ளது.