

நரேந்திர மோடியுடனான சந்திப்பை வைத்து அவருக்கு அமெரிக்கா விசா வழங்கும் என்று கூறப்படுவதை ஏற்க முடியாது. மோடி தொடர்பான அமெரிக்க விசா கொள்கையில் மாற்றமில்லை என்று அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி கூறியுள்ளார்.
குஜராத் மாநிலம், காந்தி நகரில் முதல்வர் நரேந்திர மோடியை அமெரிக்க தூதர் நான்சி பாவெல் வியாழக்கிழமை சந்தித்துப் பேசவுள்ளார்.
இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி கூறுகையில், “மோடியை அமெரிக்க தூதர் நான்சி பாவெல் சந்திப்பது தொடர்பான முடிவை அமெரிக்க அதிபர் ஒபாமாவோ அல்லது வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரியோ எடுக்கவில்லை.
இதுபோன்ற முடிவுகளை அரசின் உயர் நிலையில் இருப்ப வர்கள் எடுக்க வேண்டிய தேவையில்லை. எனினும், யாரெல்லாம் முடிவு எடுக்கும் அதிகாரத்தில் இருக்கிறார்களோ அவர்கள் அனைவரும் தீவிரமாக ஆலோசனை நடத்தினர். இந்த தருணத்தில் இத்தகைய சந்திப்பு சரியானதுதான் என்று அவர்கள் முடிவு செய்தனர்.
இந்திய – அமெரிக்க உறவை மேம்படுத்தும் வகையில் கடந்த பல மாதங்களாக மூத்த அரசியல்வாதிகளையும், தொழில திபர்களையும் சந்தித்து உரையாடி வருகிறோம். அந்த வகையில்தான் இந்த சந்திப்பும் நடைபெறவுள்ளது.
இந்த சந்திப்பின் மூலம் மோடிக்கு விசா வழங்குவது தொடர்பாக விதிக்கப்பட்டுள்ள தடையை விலக்கிக்கொள்ளும் உத்தேசம் ஏதும் இல்லை. அதே சமயம், விசா கோரி யார் விண்ணப்பித்தாலும் அமெரிக்க சட்டம் மற்றும் வெளியு றவுக் கொள்கையின்படி பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்போம்.
மக்களவைத் தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது தொடர்பாக அமெரிக்க அரசு எந்தவொரு நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை. இந்தியா மட்டு மல்ல உலகின் வேறு எந்த நாட்டிலும் அப்படியொரு நிலைப்பாட்டை நாங்கள் எடுத்ததில்லை” என்றார்.
குஜராத் கலவரத்தைத் தடுக்கத் தவறியதாக மோடி மீது புகார் கூறப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு வழங்கப்பட்ட விசாவை 2005-ம் ஆண்டு அமெரிக்கா ரத்து செய்தது. மதச்சுதந்திரத்துக்கு எதிராக அவர் செயல்பட்டதால், இந்நடவடிக்கையை எடுத்ததாக அமெரிக்கா கூறியுள்ளது.