Published : 16 Mar 2014 12:00 AM
Last Updated : 16 Mar 2014 12:00 AM

ஒபாமாவுக்கு பேஸ்புக் சவால்

பேஸ்புக்கில் நேற்றைய ‘ஹிட்’ அதன் நிறுவனர் மார்க் ஜுக்கர் பெர்க் போட்டுள்ள ஸ்டேட்டஸ்தான். 3 லட்சம் லைக், 2 லட்சம் கமெண்ட், 1 லட்சம் ஷேர் என பேராதரவு பெற்றுள்ளது. ஏன் இந்த ஏகபோக ஆதரவு என்ற கேள்வி எழுகிறதா… காரணம் இதுதான். கோடானுகோடி பேஸ்புக்வாசிகளின் நலனுக்காகவும் இண்டர்நெட் பயன்பாட்டாளர்களின் உரிமைக்காகவும் அமெரிக்க அரசுக்கும், அதிபர் ஒபாமாவுக்கும் எதிராக குரல் கொடுத்துள்ளார் மார்க் ஜூக்கர்பெர்க். அதுவும் கடுமையான வார்த்தைகளில்….

“அமெரிக்க அரசு இண்டர் நெட்டில் சாம்பியனாக இருக்கலாம். ஆனால் அச்சுறுத்தல் ஆகிவிடக் கூடாது. இண்டர்நெட் விஷயத் தில் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதை அமெரிக்க அரசு தெளிவுபடுத்த வேண்டும். இல்லையென்றால் அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்து விடுவார்கள்” என்று பொரிந்து தள்ளியிருக்கிறார் மார்க் ஜூக்கர்பெர்க். இதுவரை எதிர்க்கட்சிகளின் விமர்சனத்தை மட்டுமே எதிர் கொண்ட ஒபாமாவுக்கு இது பேரதிர்ச்சி. பெரும் ரசிகர்கள் கூட்டத்தைக் கொண்டுள்ள கார்ப்பரேட் கனவானின் இந்த கடுமையான விமர்சனம் ஒபாமா எதிர்பார்க்காத ஒன்று தான்.

என்எஸ்ஏ, சிஐஏ உள்ளிட்ட அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் மைக்ரோசாப்ட், யாகூ, கூகுள், பேஸ்புக், பால்டாக், ஏஓஎல், ஸ்கைப், யூடியூப், ஆப்பிள் ஆகிய நிறுவனங்களின் சர்வர்களையும் அதன் பயன்பாட்டாளர் களையும் தொடர்ந்து கண் காணிக்கிறது என்பது ஊரறிந்த ரகசியம். இதில் நடைபெறும் மேலும் பல ரகசிய உள்ளடி வேலைகள் வெளிச்சத்துக்கு வராதவை.

எங்களின் கண்காணிப்பு கம்ப்யூட்டர்களை முடக்க பேஸ்புக் முயற்சிப்பதாகத் தெரிகிறது என்று இருநாள்களுக்கு முன்பாக ஒரு தகவலை வெளியிட்டது என்எஸ்ஏ. இதுதான் மார்க் ஜூக்கர்பெர்க்கின் கோபத்தை உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளது.

இதனிடையே ஜூக்கர்பெர்கை ஒபாமா தொடர்பு கொண்டு இந்த விவகாரம் குறித்துப் பேசியுள்ளதாக வெள்ளை மாளிகை கூறியுள்ளது.

உளவு பார்ப்பது, தகவல் திருட்டு என தில்லுமுல்லு வேலைகள் இண்டர்நெட்டில் இருந்து எப்போதும் பிரிக்க முடியாத அம்சமாகவே உள்ளது. நாம் அனைவரும் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டிய ஒரு பழைய உண்மை ஒன்று உண்டு. “இண்டர்நெட்டை திறந்தால் அதனை நாம் பார்ப்பது இரு கண்களால், ஆனால் நாம் அதில் என்ன செய்கிறோம் என்பதை ஓராயிரம் கண்கள் கம்ப்யூட்டர் திரைக்குப் பின்னால் மறைந்திருந்து பார்த்துக் கொண்டிருக்கின்றன என்பதுதான்.” இதனை உணர்ந்து இண்டர்நெட்டை பயன்படுத்தினால் அனைவருக்கும் நலன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x