

அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள வணிக வளாகத்தில் வெள்ளிக்கிழமை இரவு மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர்.
வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள வடக்கு சியாட்டில் நகரத்தில் இருந்து சுமார் 100 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது பர்லிங்டன். அங்குள்ள கேஸ்கேட் மாலில் அடையாளம் தெரியாத மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலை குறைந்தது ஒருவர் நடத்தியிருக்கலாம் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும் இச்சம்பவம் குறித்து ட்வீட் செய்துள்ள வாஷிங்டன் மாகாண காவல்துறை அதிகாரி மார்க் ஃப்ரான்சிஸ், ''இந்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேரின் இறப்பு உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. காவல்துறை வருவதற்குள் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் தப்பிவிட்டனர்.
இருப்பினும் ஒருவர் மட்டுமே இதைச் செய்திருக்க வாய்ப்புண்டு என சந்தேகிக்கிறோம். தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது. கொலையாளி ஸ்பானிஷ் மொழி பேசுபவராக இருக்கலாம்'' என்று பதிவிட்டுள்ளார்.
உள்ளூர் ஊடகங்களில் கொலையாளி வெள்ளிக்கிழமை இரவு சுமார் 7 மணியளவில் வணிக வளாகத்துக்குள் நுழைந்ததாகக் கூறப்படுகிறது.
அவர் சுமார் 20 - 25 வயதில், ஒல்லியான தேகத்துடன் இருந்ததாவும், கருமையான முடியுடன் கருப்பு நிற சட்டை அணிந்திருந்ததாகவும் கூறப்படுகிறது.