

புனித ஆஷுரா தினத்தை முன்னிட்டு இராக்கின் கர்பாலா நகரில் உள்ள புனித தலத்தில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட ஷியா முஸ்லிம்கள் வெள்ளிக்கிழமை வழிபாடு நடத்தினர்.
முகமது நபியின் பேரன் இமாம் ஹுசைன் இதே தினத்தில்தான் கலிபாவின் வீரர்களால் கர்பாலாவில் கொல்லப்பட்டார். இதனை நினைவுகூரும் விதமாகவே ஆஷுரா தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த கொலைச் சம்பவமே முஸ்லிம்களில் சன்னி, ஷியா பிரிவினரிடையே பெரிய வேற்றுமையையும் பகையுணர்வையும் ஏற்படுத்தியது.
இராக்கில் ஷியா முஸ்லிம்களுக்கு எதிரான சன்னி முஸ்லிம் பயங்கரவாதிகளின் வெடிகுண்டு தாக்குதல்கள் வெள்ளிக்கிழமையும் தொடர்ந்தது. இதில் மொத்தம் 44 பேர் கொல்லப்பட்டனர்.
தியாலா மாகாணத்தில் ஷியா பிரிவினர் வசிக்கும் பகுதிக்குள் போலீஸ் உடையில் புகுந்த பயங்கரவாதி தனது உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்ததில் 32 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். 80 பேர் படுகாயமடைந்தனர். இதையும் சேர்த்து ஷியா பிரிவினருக்கு எதிராக 3 பெரிய வெடிகுண்டு தாக்குதல்கள் ஒரே நாளில் நிகழ்த்தப்பட்டுள்ளன.