முதல் நோபல் பரிசு வென்ற பாகிஸ்தான் விஞ்ஞானியின் உறவினர் லாகூரில் சுட்டுக்கொலை

முதல் நோபல் பரிசு வென்ற பாகிஸ்தான் விஞ்ஞானியின் உறவினர் லாகூரில் சுட்டுக்கொலை
Updated on
1 min read

பாகிஸ்தானின் முதல் நோபல் பரிசு வென்ற விஞ்ஞானி ஆப்தஸ் சலாமின் உறவினர் லாகூரில் சுட்டுக் கொல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல வழக்கறிஞரான மாலிக் சலீம் லத்தீப், இவரது மகனும் வழக்கறிஞருமான ஃபர்ஹான் ஆகியோர் நன்கனா சாஹிப் நீதிமன்றத்திற்குச் சென்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத நபர் இருவர் மீதும் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் மாலிக் சலீம் லத்தீப் அந்த இடத்திலேயே பலியானார், மகன் ஃபர்ஹான் பலத்த துப்பாக்கி காயங்களுடன் மருத்துவமனையில் ஆபத்துக் கட்டத்தை தாண்டாத நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மாலிக் சலீம் லத்தீப், பாகிஸ்தானின் முதல் நோபல் பரிசை வென்ற விஞ்ஞானி ஆப்தஸ் சலீமின் உறவினர். லத்தீப் சிறுபான்மை பிரிவான அகமதியா பிரிவைச் சேர்ந்தவர். ஜமாத் அகமதியா நன்கனா சாஹிப் அமைப்பின் தலைவராகவும் இவர் இருந்து வந்தார்.

லஸ்கர்-இ-ஜாங்வி அமைப்பினர் இவரைப் படுகொலை செய்ததாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த அமைப்பு ‘இன்னொரு துரோகி’யை நரகத்திற்கு அனுப்பியதாக இந்த அமைப்பு சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளது.

“லெஜ் ரியாஸ் படையினர் இன்று அகமதி துரோகி ஒருவரை நரகத்திற்கு அனுப்பிய புனித காரியத்தைச் செய்துள்ளது, இவர் தனது பிரிவினரின் நம்பிக்கையை அங்கு பரப்பி வந்தார்” சுட்டுக் கொன்ற அமைப்பினர் சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளது.

இந்தப் படுகொலை குறித்து ஜமாத்-இ-அகமதியா அமைப்பின் செய்தித் தொடர்பாளர் சலீமுத்தீன் கூறும்போது, “வழக்கறிஞர் சலீம் அவரது நம்பிக்கைக்காக இலக்கு வைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். அகமதி சமூகத்தினர் மீது வெறுப்புணர்வை பரப்பும் சக்திகளை அரசு ஒடுக்கத் தவறிவிட்டது” என்றார்.

அகமதி சிறுபான்மையினர் பிரச்சினை இந்திய-பாகிஸ்தான் பிரிவினை காலத்திலிருந்தே பாகிஸ்தானில் நீடித்து வரும் ஒரு பிரச்சினையாக இருந்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in