

பாகிஸ்தானில் தீவிரவாதத்தை தூண்ட இந்தியா நிதியுதவி அளிக்கிறது என்று அந்த நாடு குற்றம் சாட்டியுள்ளது.
ஜி20 மாநாடு, ஆசியான் மாநாடுகளில் பேசிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, குறிப்பிட்ட ஒரு நாடு தீவிரவாதத்தை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்து வருகிறது என்று குற்றம் சாட்டினார். பாகிஸ்தானின் பெயரைக் குறிப்பிடாமல் மறைமுகமாக அவர் விமர்சனம் செய்தார்.
இதற்குப் பதிலடியாக பாகிஸ்தான் அரசு இந்தியா மீது அவதூறுகளை அள்ளி வீசியுள்ளது. இதுதொடர்பாக அந்த நாட்டின் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் நபீஸ் ஜகாரியா இஸ்லாமாபாதில் நிருபர்களிடம் கூறியதாவது:
ஒரு குறிப்பிட்ட நாடு தீவிரவாதத்தை ஏற்றுமதி செய்வதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார். அந்த குறிப்பிட்ட நாடு இந்தியாதான். பாகிஸ்தானில் தீவிரவாதத்தை தூண்ட இந்தியா நிதியுதவி அளித்து வருகிறது. இதற்கு எங்களிடம் ஆதாரம் உள்ளது. பாகிஸ்தானில் நடைபெற்ற பல்வேறு தீவிரவாத தாக்குதல்களில் இந்தியாவுக்கு நேரடி தொடர்பு உள்ளது.
பல்வேறு நாச வேலைகளில் ஈடுபட்டு வந்த இந்தியாவின் ரா உளவு அமைப்பு அதிகாரி கல்பூஷன் ஜாதவை பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் அண்மையில் கைது செய்தனர். அவரது ஒப்புதல் வாக்குமூலம் இந்தியாவுக்கு எதிரான முக்கியமான சாட்சியாகும். ஐ.நா. பொதுஅவை மாநாட்டில் இந்தப் பிரச்சினையை பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் எழுப்புவார்.
காஷ்மீரில் இந்திய ராணுவம் படுகொலைகளில் ஈடுபட்டு வருகிறது. கடந்த 62 நாட்களில் 72 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். 700-க்கும் மேற்பட்டோர் கண் பார்வையை இழந்துள்ளனர். இந்த விவகாரம் குறித்தும் ஐ.நா. சபையில் பிரதமர் நவாஸ் ஷெரீப் கேள்வி எழுப்புவார்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.