

சிங்கப்பூரில் நிறைவேற்றப்பட உள்ள புதிய மசோதாவால் இந்தியத் தொழிலாளர்களுக்குப் பாதிப்பில்லை என்று அந்த நாட்டு சட்ட, வெளியுறவுத் துறை அமைச்சர் கே. சண்முகம் தெரிவித்தார்.
சிங்கப்பூரில் இந்தியத் தொழிலாளர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் லிட்டில் இந்தியா பகுதியில் கடந்த டிசம்பர் 8-ம் தேதி பெரும் கலவரம் வெடித்தது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து லிட்டில் இந்தியா பகுதியில் போலீஸ் கெடுபிடி அதிகரித்துள்ளது. இந்நிலையில் லிட்டில் இந்தியா பகுதி போலீஸாருக்கு கூடுதல் அதிகாரம் வழங்க வகை செய்யும் புதிய மசோதா சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் அறிமுகம் செய்யப்பட்டது.
அதன்படி லிட்டில் இந்தியா பகுதியில் மதுவிற்பனை தடையை அமல்படுத்தவும் கூட்டத்தினரைக் கட்டுப்படுத்தவும் போலீஸாருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கப்பட உள்ளது.
இதுகுறித்து அந்த நாட்டு சட்டம் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் கே. சண்முகம் கூறியதாவது:
லிட்டில் இந்தியா பகுதியில் மீண்டும் ஒரு கலவரம் நடக்கக்கூடாது என்பதற்காக புதிய மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.சிங்கப்பூர் அரசின் நடவடிக்கைகளுக்கு இந்தியத் தொழிலாளர்கள் முழு ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர். தவறிழைக்காத, நேர்மையான தொழிலாளர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று அவர் உறுதியளித்தார்.
லிட்டில் இந்தியா கலவரம் தொடர்பாக 25 இந்தியத் தொழிலாளர்கள் மீது நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.