

ஜப்பானின் கியுஷு நகரில் வசிக்கும் 55 வயது மசாஹிகோ சுகா சாலையில் சென்றால் அவரை நிறுத்தி புகைப்படங்கள் எடுக்காத வர்களே இல்லை. எப்பொழுதும் தள்ளுவண்டியில் 9 பூனைகளை வைத்துக்கொண்டு நடந்துகொண் டிருப்பார். ஜப்பானியர்கள் பூனை களை விரும்பி வளர்ப்பார்கள். ஆனால் அவற்றை வெளியில் அழைத்துச் செல்வதில்லை. அதனாலேயே மசாஹிகோவை எல்லோரும் வியப்பாகப் பார்க் கிறார்கள். பூனை மனிதர் என்றே அழைக்கிறார்கள். “1999-ம் ஆண்டு ஒரு பூனையை எடுத்து வளர்க்க ஆரம்பித்தேன். நாய்க்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை மனிதர்கள் பூனைக்குக் கொடுப்பதில்லை என்பதைக் கவனித்தேன். நாய்களைப் போலவே மனிதர்களின் அன்புக்கும் அரவணைப்புக்கும் பூனைகளும் ஏங்குகின்றன. உலகம் முழுவதும் நாய்களைத் தினமும் நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்கிறார்கள். யாருமே பூனைகளை அப்படி விரும்பி அழைத்துச் செல்வதில்லை. நான் பூனைகளை வெளியில் அழைத்துச் செல்ல முடிவெடுத்து ஒரு தள்ளுவண்டி வாங்கினேன். அதில் அமைதியாக அமர்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டே வருகின்றன பூனைகள். குழந்தைகள் அவற்றுடன் கொஞ்சி விளையாடுகின்றனர். இதனால் பூனைகளும் மகிழ்ச்சி யடைகின்றன. குழந்தைகளும் மகிழ்ச்சியடைகின்றனர். நான் சந்திக்கும் மனிதர்களிடமெல்லாம் நாய்களைப் போல பூனைகளுக்கும் மதிப்பு கொடுங்கள், வெளியில் அழைத்துச் செல்லுங்கள் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்” என்கிறார் மசாஹிகோ.
பூனைகளுக்காகக் குரல் கொடுக்கும் மனிதர்!
சீனாவின் ஷான்ஸி மாகாணத்தைச் சேர்ந்த வாங்குக்கும் ஸிவோலிக்கும் கடந்த மாதம் புகழ்பெற்ற அரங்கத்தில் ஆடம்பரமாகத் திருமணம் ஏற்பாடாகியிருந்தது. பெண் வீட்டார் மாப்பிள்ளையின் குடும்பத்தையும் உறவினர்களையும் அன்புடன் உபசரித்தனர். ஆனால் அவர்கள் யாரும் இயல்பாகப் பேசவில்லை. மகிழ்ச்சியாகச் சடங்குகளில் கலந்துகொள்ளவில்லை. ஒருவிதப் பதற்றத்துடனேயே காணப்பட்டனர். பல பேரிடம் சாதாரணமாகக் கேட்ட கேள்விகளுக்குக் கூடப் பதில் கிடைக்கவில்லை. சந்தேகப்பட்ட ஸிவோலி காவல்துறையில் புகார் அளிக்கப் போவதாகச் சொன்னவுடன், பலரும் தாங்கள் வாங்கின் உறவினர்களோ, நண்பர்களோ இல்லை என்பதையும் வாடகைக்கு அழைத்து வரப்பட்டவர்கள் என்பதையும் ஒப்புக்கொண்டனர். கல்லூரி மாணவர்களும் டாக்ஸி டிரைவர்களும் 800 ரூபாய்க்காக உறவினர்களாக வருவதற்குச் சம்மதித்ததாகச் சொன்னார்கள். அதற்குச் சாட்சியாகக் குறுஞ்செய்திகளையும் காட்டினர். உடனே ஸிவோலி காவல்துறையிடம் புகார் கொடுத்தார். வாங்கைக் கைது செய்து அழைத்துச் சென்றனர். “என்னால் நம்பவே முடியவில்லை. கடந்த மூன்று ஆண்டுகளில் வாங் மிகவும் நாகரிகமான அன்பான மனிதராகத்தான் பழகினார். எனக்காக எவ்வளவோ செலவு செய்திருக்கிறார். எங்கள் இருவருக்கும் நல்ல புரிதல் இருந்தது. பணத்துக்காகத்தான் என்னைத் திருமணம் செய்துகொள்ளத் திட்டமிட்டிருக்கிறார் என்பதை அறிந்தபோது உடைந்துவிட்டேன். பணம் இல்லாவிட்டாலும் வாங் உண்மையானவராக இருந்திருந்தால் திருமணம் செய்திருப்பேன். அடிப்படையில் நேர்மையில்லாதவரிடம் எப்படி வாழ்க்கையை ஒப்படைப்பது? இப்படி ஒரு ஏமாற்றுக்காரரைத் திருமணம் செய்துகொள்ளாமல் தப்பித்ததை நினைத்து நிம்மதியடைகிறேன். இதுவரை ஒரு கோடி ரூபாயைத் தொழிலுக்காக எங்களிடம் வாங்கியிருக்கிறார். வரதட்சணையாக 65 லட்சம் ரூபாயும் ஆடம்பரமான காரும் கொடுத்திருக்கிறோம்” என்கிறார் ஸிவோலி.
ஏமாற்றாதே ஏமாறாதே...