

அமெரிக்காவின் முதல் பெண்மணியாக உங்களை கவுரப்படுத்தியிருக்கிறேன் என நம்புவதாக மிச்செல் ஒபாமா வெள்ளை மாளிகையில் தனது கடைசி உரையில் நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.
மேலும் அவர் பேசும்போது "சிறந்த கல்வி எதையும் சாத்தியமாக்கும் அமெரிக்க அதிபர் பதவி என் கணவருக்கு அதனாலேயே சாத்தியமாயிற்று" என்றார்.
வெள்ளை மாளிகையில் வெள்ளிக்கிழமையன்று அமெரிக்காவின் முதல் பெண்மணியாக தனது ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவித்து மிச்செல் பேசியதாவது, "அமெரிக்காவின் முதல் பெண்மணியாக இருந்தது எனது வாழ்வில் கிடைத்த மிகப் பெரிய கவுரவமாகும். அந்தவகையில் அமெரிக்காவின் முதல் பெண்மணியாக இருந்து உங்களை கவுரவப்படுத்தி இருக்கிறேன் என்று நம்புகிறேன்.
நானும் என் கணவரும் பொருளாதார ரீதியாக மிகுந்த சிரமங்களை அனுபவித்திருக்கிறோம். ஆனால், கல்வி எங்களை காப்பாற்றியது. சிறந்த கல்வி எதையும் சாத்தியமாக்கும். அமெரிக்க அதிபர் பதவி என் கணவருக்கு அதனாலேயே சாத்தியப்பட்டது.
இளைஞர்கள் எதற்கும் பயம் கொள்ளக் கூடாது. உங்களால் முடியும் என்று நம்பிக்கைக் கொள்ள வேண்டும். எதற்கும் பயம் கொள்ள வேண்டாம். கவனமாக இருங்கள், தீர்க்கமாய் இருங்கள், நம்பிக்கையுடன் இருங்கள், அதிகாரத்துடன் இருங்கள், தரமான கல்வியுடன் உங்களை அடையாளப்படுத்திக் கொள்ளுங்கள்.
அந்தக் கல்வியை பயன்படுத்தி நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டுச் செல்லுங்கள். நம்பிக்கையுடன் எடுத்துக்காட்டாய் வாழுங்கள்" என்று பேசினார்.
மிச்செல் பேசுகையில் அவரை சுற்றியிருந்த ஆதர்வாளர்கள் பலர் கண்ணீருடன் அவரை உற்சாகப்படுத்தினர்.
அமெரிக்க அதிபராக 8 ஆண்டுகள் பதவி வகித்த பாரக் ஒபாமாவின் பதவிக்காலம், இம்மாதத்தில் முடிவடைகிறது. இதனைத் தொடர்ந்து வரும் ஜனவரி மாதம் 20ஆம் நாள் அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவி ஏற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.