

இராக் மற்றும் சிரியாவில் செயல்படும் ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாக போரிடுவதற்காக அந்நாடுகளுக்கு செல்ல முயன்றதாக 3 பேர் மீது மலேசிய நீதிமன்றம் குற்றச்சாட்டுப் பதிவு செய்துள்ளது.
மலேசியாவைச் சேர்ந்த 3 பேர், துருக்கி வழியாக சிரியா சென்று ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் சார்பில் போரிட முடிவு செய்தனர். துருக்கிக்கு விமானத்தில் செல்வதற்காக கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்துக்கு கடந்த செப்டம்பர் 25-ம் தேதி வந்த அவர்களிடம் பாதுகாப்புப் படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இறுதியில், தீவிரவாத இயக்கத்துக்கு ஆதரவாக செயல்பட்டனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் அவர்களை கைது செய்தனர்.
ஐ.எஸ். அமைப்புடன் இவர்களுக்கு தொடர்பு இருப்பதாகக் கூறி, அது தொடர்பான ஆதாரங்களையும் அரசு தரப்பு வழக்கறிஞர் சுகோர் அபு பக்கர், நீதிமன்றத்தில் அளித்தார். இதையடுத்து மூவர் மீதும் குற்றச்சாட்டுப் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. இக்குற்றம் நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்டவர்களுக்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்கப்படும்.
மலேசியா போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஐ.எஸ். அமைப்பு வேரூன்றி வருவதையே இந்நிகழ்வு காட்டுவதாக சமூக ஆர்வலர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு, இதேபோன்று ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடைய 13 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த ஆண்டு மட்டும் 36 பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலர் மீதுதான் குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டு, நீதிமன்ற விசாரணை நடைபெற்று வருகிறது.