தேர்தல் முறைகேடு புகார்: ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பாக். கொடி எரிப்பு
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள நீலம் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 21-ம் தேதி நடைபெற்ற தேர்தலில் தில்லுமுல்லுகள் நடைபெற்றதாகக் கூறி, மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பாகிஸ்தானின் தேசியக் கொடி எரிக்கப்பட்டது.
கடந்த 21-ம் தேதி நடந்த தேர்தலில், மொத்தமுள்ள 41 இடங்களில் 31 இடங்களை பிரதமர் நவாஸ் ஷெரீபின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்) கட்சி கைப்பற்றியது. பாகிஸ்தான் மக்கள் கட்சியும், முஸ்லிம் மாநாட்டுக் கட்சியும் தலா 3 இடங்களைக் கைப்பற்றின.
இந்த தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தலுக்காக ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களில் கருப்புச் சாயம் பூசியும், பழைய டயர்களை எரித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சாலை மறியலில் ஈடுபட்ட அவர்கள், போலீஸாருடன் மோதலில் ஈடுபட்டனர். பாகிஸ்தான் கொடியை போராட்டக்காரர்கள் எரித்ததால், போலீஸார் தடியடி நடத்தினர்.
முஸாபர்பாத்தில் முஸ்லிம் மாநாட்டுக் கட்சி ஆதரவாளரை பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்) கட்சியினர் கொலை செய்ததைத் தொடர்ந்து முஸாபர்பாத், கோட்லி, சினாரி, மிர்புர் உட்பட பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள நகரங்களில் போராட்டம் பெரிய அளவில் வெடித்தது.
பாகிஸ்தானில் ஆளும் கட்சிக்கு ஆதரவாகவே எப்போதும் தேர்தல் முடிவுகள் சாதகமாக அமைக்கப் படுகிறன்றன என உள்ளூர் மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தேர்தலின் உண்மைத் தன்மை குறித்து அரசியல் கட்சிகள் கேள்வியெழுப்பி உள்ளன.
தேர்தலில் பண பலம், ஆள்பலத்தைப் பயன்படுத்தி முறைகேடு நடைபெற்றுள்ளதை, பாகிஸ்தான் மனித உரிமைகள் ஆணையம் உறுதி செய்துள்ளது.
