

இராக்கின் மோசூல் நகரில் உள்ள மாகாண தலைமைச் செயலகத்தை அந்த நாட்டு ராணுவம் மீட்டுள்ளது.
இராக் நாட்டின் நினிவே மாகாண தலைநகர் மோசூல். இது அந்த நாட்டின் 2-வது மிகப்பெரிய நகர் ஆகும். கடந்த 2014 ஜூனில் ஐ.எஸ். தீவிரவாதிகள் மோசூலை கைப்பற்றினர். அந்த நகரை மீட்க இராக் ராணுவம் கடந்த 6 மாதங்களாக தீவிரமாகப் போரிட்டு வருகிறது.
அதன்பயனாக மோசூலின் கிழக்கு, மேற்குப் பகுதி ராணுவ கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது. இதைத் தொடர்ந்து அங்குள்ள மாகாண தலைமைச் செயலகத்தை ராணுவம் நேற்று மீட்டது. மேலும் அல்-ஹுரியா என்ற முக்கிய பாலத்தையும் ராணுவம் தன்வசமாக்கியுள்ளது.
இருதரப்புக்கும் கடும் சண்டை நடைபெறுவதால் சுமார் 20 லட்சம் மக்கள் அகதிகளாகி உள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கூறியபோது, மாற்றுத் துணிகூட இல்லாமல் வீட்டை விட்டு வெளியேறி முகாம்களில் தஞ்சமடைந்துள்ளோம். இராக் ராணுவ வீரர்கள் எங்களிடம் கடுமையாக நடந்து கொள்கின்றனர் என்று தெரிவித்தார்.