அமெரிக்க பேராசிரியர்கள் மூவருக்கு பொருளாதார நோபல்

அமெரிக்க பேராசிரியர்கள் மூவருக்கு பொருளாதார நோபல்
Updated on
1 min read

2013-ம் ஆண்டின் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு, அமெரிக்காவைச் சேர்ந்த பேராசிரியர்கள் லார்ஸ் பீட்டர் ஹான்சென், யூஜின் ஃபாமா, ராபர்ட் ஷில்லர் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சொத்துகளுக்கான சந்தை மதிப்பு நிலவரத்தை அறிந்துகொள்வது பற்றி இவர்கல் மேற்கொண்ட ஆய்வுக்காக, இந்த உயரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது.

ஃபாமாவும், ஹான்செனும் சிகாகோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்களாக உள்ளனர். கனெக்டிக்கட் மாகாணத்தில் உள்ள யேல் பல்கலைக்கழகத்தில் ஷில்லர் பேராசிரியராக உள்ளார்.

“ஏற்ற இறக்கத்துடன் இடர் (ரிஸ்க்) அதிகமாகவும், பாரபட்சமான அணுகுமுறையும் இருக்கும் சந்தையில் சொத்து விலையை நிர்ணயம் செய்வது தொடர்பாக தங்களின் ஆய்வின் மூலம் முக்கியப் பங்களிப்பை மூவரும் செய்துள்ளனர்” என்று தேர்வுக் குழு தெரிவித்துள்ளது.

நோபல் பரிசு வழங்கப்படுவதற்கு காரணமான விஞ்ஞானி ஆல்ஃபிரட் நோபல், தனது உயிலில் பொருளாதாரத்துறையைப் பற்றி குறிப்பிடவில்லை. ஆரம்ப காலத்தில் நோபல் பரிசுக்குழுவும் அந்தத் துறைக்கு பரிசு வழங்கியதில்லை.

1968-ம் ஆண்டு சுவீடனின் மத்திய வங்கி, தனது 300-வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், இப்பரிசை அளிக்கும்படி நோபல் தேர்வுக் குழுவைக் கேட்டுக் கொண்டது. பரிசுத் தொகையையும் அந்த வங்கியே அளித்து வருகிறது. 1969-ம் முதல் பொருளாதாரத்துக்கான பரிசு வழங்கப்படுகிறது.

பொருளாதாரத் துறைக்கான பரிசை வென்றவர்களில் அமெரிக்கர்களே அதிகம். கடந்த 10 ஆண்டுகளில் இப்பரிசை பெற்ற 20 பேரில் 17 பேர் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள்தான்.

2012-ம் ஆண்டின் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசை அமெரிக்காவைச் சேர்ந்த ஆல்வின் ராத், லியாட் ஷெப்லே ஆகியோர் வென்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in