இசைப்ரியா இறுதி நிமிடங்கள்: இலங்கைக்குப் புதிய நெருக்கடி

இசைப்ரியா இறுதி நிமிடங்கள்: இலங்கைக்குப் புதிய நெருக்கடி
Updated on
2 min read

பல எதிர்ப்புகளுக்கு இடையில் நவம்பர் இரண்டாம் வாரத்தில் காமென்வெல்த் மாநாட்டை நடத்த விருக்கும் இலங்கைக்கு ஒரு புதிய சிக்கல் உருவாகியிருக்கிறது. கடந்த அக்டோபர் 31 அன்று வெளியான “நோ பையர் சோன்” எனும் ஆவணப் படத்திலிருந்து இசைப்ரியா குறித்த காட்சிகள் ஒட்டுமொத்த சர்வதேச கவனத்தையும் மீண்டும் ஒரு முறை இலங்கையின் பக்கம் திருப்பியிருக்கிறது.

சில மாதங்களுக்கு முன்பு பிரபாகரன் மகன் பாலசந்திரனின் புகைப்படங்கள் உருவாக்கிய ஒரு அதிர்வை மீண்டும் உருவாக்கியிருப்பதோடு அல்லாமல் இறுதிக்கட்ட போரில் நடந்ததாகச் சொல்லப் படும் மனித உரிமை மீறல்கள் பற்றிய வாதங்களை மீண்டும் எழுப்பியிருக்கிறது இசைப்பிரியா குறித்த வீடியோ பதிவுகள்.

சேனல் 4 தொலைகாட்சி

விடுதலைப்புலிகளின் தொலைக்காட்சி யில் செய்தி வாசிப்பாளராகப் பணிபுரிந்த இசைப்ரியா இறந்து கிடந்தது போன்ற வீடியோ காட்சிகளை கடந்த 2010-ல் வெளியிட்டது சேனல் 4 தொலைகாட்சி. நிர்வாணமாக இறந்து கிடந்த இசைப்ரியா பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகியிருக்கலாம் என்று அப்போது சொல்லப்பட்டது. இப்போது சேனல் 4 வெளியிட்டிருக்கும் காட்சிகள் இசை ப்ரியாவை இலங்கை ராணுவத்தினர் உயிருடன் பிடித்திருப்பதாகக் காட்டு கிறது. அரை நிர்வாணமாக இருக்கும் இசைப்ரியாவின் மீது ஒரு வெள்ளைத்துணியைப் போர்த்தி அழைத்துச் செல்லும்போது அவரை பிரபாகரனின் மகள் என்று சொல்கிறார்கள் ராணுவத்தினர். அதை இசைப்ரியா அழுதுகொண்டே மறுக்கிறார். 28 வயது இசைப்ரியா பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு பிறகு கொல்லப் பட்டிருக்கலாம் என்கிற வாதத்துக்கு இந்த காட்சிகள் வலுசேர்ப்பதாக உள்ளது.

இலங்கை மறுப்பு

இந்த காட்சிகள் ஜோடிக்கப்பட்டவை என்று இலங்கை அரசாங்கம் மறுத்தி ருக்கிறது. காமன்வெல்த் மாநாடு நடக்க விருக்கும் வேளையில் இலங்கையை இழிவுபடுத்தும் நோக்கத்தில் இந்த காட்சிகள் வெளியிடப்பட்டிருப்பதாகச் சொல்கிறார் இலங்கை ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் ருவான் வனிகசூரியா. ஆனால் இந்த காட்சிகள் இலங்கை அரசாங்கத்துக்கு நெருக்கடி ஏற்படுத்தியிருப்பதை மறுக்க முடியாது.

ப.சிதம்பரம் வலியுறுத்தல்

சமீபத்தில் சென்னையில் தி.மு.க. தலைவர் கருணாநிதியைச் சந்தித்துவிட்டு சென்ற நிதியமைச்சர் ப.சிதம்பரம் இந்த காட்சிகள் உண்மையானவை போலதான் தெரிகின்றன என்றார். போரில் மனித உரிமை மீறல்கள் புரியப்பட்டதாக சொன்ன சிதம்பரம், மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களை இலங்கை அரசாங்கம் அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். மேலும் காமன்வெல்த் மாநாட்டுக்குச் செல்வது குறித்து மத்திய அரசு இறுதி முடிவு எதுவும் எடுக்கவில்லை என்றும் சொன்னார்.

சிதம்பரம் மட்டுமல்ல, மத்திய அமைச்சரவையிலும் காங்கிரஸிலும் உள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த பல தலைவர்கள் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் கலந்துகொள்வது பற்றி மாற்றுக் கருத்துடனேயே இருக்கி றார்கள் என்று சொல்லப்படுகிறது. முழுமையான புறக்கணிப்பை அவர்கள் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், இலங்கை மீதான போர் குற்ற புகார்கள் பெருகிவரும் இச்சூழலில் குறிப்பாக இசைப்ரியாவின் வீடியோ காட்சிகளின் பின்னணியில் பிரதமர் மாநாட்டில் கலந்துகொள்ள கூடாது என்று அவர்கள் எண்ணுகிறார்கள்.

சட்டபேரவையில் காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என்று தீர்மானம் இயற்றப்பட்ட நிலையில், காமன்வெல்த் மாநாட்டில் இந்திய பிரதமரே நேரடியாக கலந்துகொள்வது தமிழகத்தில் காங்கிரஸுக்கு நெருக்கடி யான சூழலை உருவாக்கும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஏற்கெனவே, தமிழகத்தில் சில கட்சிகள் இசைப்ரியாவின் வீடியோ காட்சிகளின் அடிப்படையில் சர்வதேச விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று கோரத் தொடங்கியிருக்கின்றன.

இலங்கைக்கு நெருக்கடி

அதே வேளையில், இசைப்ரியா குறித்த காட்சிகளை வெளியிட தேர்ந் தெடுக்கப்பட்ட நேரம் குறித்தும் கேள்வி கள் எழாமல் இல்லை. காமன்வெல்த் மாநாடு நடக்க இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் இந்த வீடியோவை வெளியிடுவதன் மூலம் இலங்கை அரசாங்கத்துக்கு நெருக்கடி கொடுப்பது நோக்கமாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. அதை “நோ பயர் சோன்” ஆவணப்படத்தின் இயக்குனர் கல்லம் மக்ரேவும் மறுக்கவில்லை. “நமது (இங்கிலாந்த்) பிரதமருக்கும் இந்தியப் பிரதமருக்கு இந்த காட்சிகள் ஒரு அழுத்தத்தை கொடுக்கும். இந்த காட்சிகள் எழுப்பும் கேள்விகளைத் தவிர்த்துவிட்டு காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்துவது கடினம்” என்று சொல்லியிருக்கிறார் அவர்.

நோ பையர் சோன் ஆவணப்படம்

இன்னும் சில நாட்களில் நோ பையர் சோன் ஆவணப்படம் சேனல் 4 தொலைகாட்சியில் முழுமையாக வெளியிடப்படவிருக்கிறது. காமன்வெல்த் மாநாட்டுக்கு முன்பு இந்த ஆவணப்படம் முழுமையாக வெளியிடப்பட்டால் அது இலங்கைக்கு புதிய நெருக்கடியையும் சர்வதேச சமூகத்தின் மேலான கவனத்தையும் கோரும் என்று சொல்லப்படுகிறது.

இந்த சூழலில் மனித உரிமை மீறல்கள் பற்றி விசாரணை நடத்த இலங்கைக்கு இந்தியா அழுத்தம் கொடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காமன்வெல்த் மாநாட்டுக்கு முன்பு வெளியாகும் ஆவணப்படத்தை இலங்கை எப்படி எதிர்கொள்ளும், சர்வதேச சமூகம் தரக்கூடிய அழுத்தத்தை எப்படி கையாளும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in