

இது ஒரு சீனக் கனவு என்பதுதான் பெரும்பாலும் அவரது பேச்சின் தொடக்கமாக இருக்கும். சீனாவின் முதன்மையான கோடீஸ் வரர்களில் அவரும் ஒருவர். பெயர் சென் குவாங்பியா. வீட்டு உபயோகப் பொருள்கள் கழிவு முதல் பெரும் தொழிற்சாலைகளில் மீதமாகும் பொருள்கள் வரை “ரீசைக்ளிங்” செய்யும் தொழில் நடத்தி பெரும் கோடீஸ்வரர் ஆனவர்.
சீனாவில் இவரை விடப் பெரிய கோடீஸ்வரர்கள் பலர் இருந்தும் இப்போது மேற்குலக ஊடகங்களால் பெரிதும் விரும்பி கவனிக்கப்படும் நபராகிவிட்டார் சென்.
இதுநாள் வரை சீனாவில் பெரும் கொடையாளியாகவும், ஜன சிநேகனாகவும் அறியப்பட்டு வந்த இவர் இப்போது சர்வதேச அளவிலும் கவனத்தை ஈர்க்க காரணம் இல்லாமல் இல்லை.
தனது அதிரடியான செயல்களாலும், பேச்சுகளாலும் சீனாவில் பெரும்பாலான மக்களின் கவனத்தை ஈர்த்தவர் சென்.
சமீபத்தில் தென் சீனக் கடல் தீவுகள் தொடர்பாக ஜப்பான் -சீனா இடையே பிரச்சினை ஏற்பட்டபோது ஜப்பானில் தயாரிக்கப்பட்ட 43 கார்களை வாங்கி அதனை மக்களுடன் சேர்ந்து அடித்து நொறுக்கி, எந்த அளவுக்கு சீனப் பற்றாளன் என்பதைக் காட்டினார் சென்.
அவரது சமீபத்திய அதிரடி அறிவிப்பு அமெரிக்காவின் முதன்மையான “தி நியூயார்க் டைம்ஸ்” நாளிதழை வாங்கப் போகிறேன் என்பதுதான்.
மேற்குலகத்தை தன்பக்கம் திருப்ப நினைத்துதான் இப்படி ஓர் அறிவிப்பை வெளியிட்டாரோ என்னவோ.
சென் இதனை கூறி வாய் மூடவில்லை. அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் மின்னணு ஊடகங்களிலும், சமூக வலைத் தளங்களிலும் காட்டுத்தீயாக செய்தி பரவியது.
பத்திரிகையை விற்கக் காரணம் என்ன, சீனரிடம் சென்றால் அதன் எதிர்காலம் எப்படியிருக்கும் என்பது போன்ற கருத்துகள் சர்வதேச தொலைக்காட்சிகளில் அலசப்பட்டன.
இத்தனையும் நடப்பதற்கு முன்பு, “தி நியூயார்க் டைம்ஸை” ஏன் வாங்கப் போகிறேன் என்பது குறித்து சென் விளக்கமளித்தார்.
சீனா என்றாலே வில்லன் என்பதுபோன்ற ஒரு மாயத்தோற்றம்தான் சர்வதேச அளவில் உருவாக்கப்பட்டுள்ளது. சர்வதேச ஊடகங்கள் சீனா குறித்து மிகைப்படுத்தி வெளியிடும் தவறான செய்திகள்தான் இதற்குக் காரணம். எனவே அமெரிக்காவில் பிரபலமான “தி நியூ யார்க் டைம்ஸை” வாங்கி அதன் மூலம் சீனாவின் புகழை சர்வதேச அளவில் நிலை நாட்டப்போகிறேன். வரலாற்றுப் பிழைகள் பலவற்றை திருத்தி எழுதப் போகிறேன் என்று கூறி ஊடகங்களின் செய்திப் பசிக்கு தீனி போட்டார் சென்.
இத்தனைக்கும் சீனாவில் “தி நியூயார்க் டைம்ஸ்” நாளிதழும், அதன் இணைய தளமும் தடை செய்யப்பட்டுள்ளன. அந்நாட்டு பிரதமராக இருந்த வென் ஜியாபோவின் குடும்ப சொத்து விவரங்களை சேகரித்து வெளியிட்டதுதான் “தி நியூயார்க் டைம்ஸ்” தடை செய்யப்படக் காரணம். இது சுமார் ஓராண்டுக்கு முன்பு நடந்த கதை.
இந்த சூழ்நிலையில் பத்திரிகை நிறுவனம் விற்பனைக்கு வருகிறதா என்பது குறித்து விளக்கமளிக்க வேண்டிய கட்டாயம் “ தி நியூயார்க் டைம்ஸ்” நிர்வாகத்துக்கு ஏற்பட்டது. பத்திரிகை நிறுவனத்தை விற்கும் திட்டம் ஏதும் இல்லை. வதந்திகளை நம்ப வேண்டாம் என்பதுதான் நிர்வாகத்தின் ஒரே பதில்.
மேலும் பல கேள்விகள் சென் குவாங்பியாவை நோக்கித் திரும்பின. சென் நிதானமாக பேசினார். நீங்களாவது முன்பே சொல்லியிருக்கக் கூடாதா… நன்கு விசாரித்துப் பார்த்த பின்புதான் தெரிந்தது, “தி நியூயார்க் டைம்ஸின்” சர்க்குலேஷன் கொஞ்சம் கம்மிதானாமே. அது நமக்கு சரிப்பட்டு வராது என்று தோன்றுகிறது. எனவே அதனை விட அதிகம் விற்பனையாகும் பத்திரிகையான “தி வால் ஸ்ட்ரீட் ஜர்னலை” வாங்கலாம் என்ற யோசித்துக் கொண்டிருக்கிறேன் என்று பேசி அதிரவைத்தார் சென்.
அடுத்ததாக வால் ஸ்ட்ரீட் ஜெர்னல் சென்னின் வசமாகிறது என்று செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னின் பேட்டிகளை தொடர்ந்து வாசிப்பவர்கள் மட்டும் இது சீனக் கனவா… அல்லது சீனக் காமெடியா… என்று புரியாமல் யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.