

இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் தலைவர் நவநீதம் பிள்ளை பரிந்துரைத்துள்ளார்.
இலங்கையில் 2009-ல் நடைபெற்ற இறுதிக்கட்ட போரின்போது சுமார் 40 ஆயிரம் அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதை உறுதி செய்யும் வகையில் அண்மையில் மன்னார் பகுதியில் பூமியைத் தோண்டியபோது நூற்றுக்கும் மேற்பட்ட மண்டைஓடுகள் கண்டெடுக்கப்பட்டன.
இலங்கை உள்நாட்டுப் போர் தொடர்பாக ஆய்வு நடத்திய நவநீதம் பிள்ளை 74 பக்க அறிக்கையை ஐ.நா. சபையில் சமர்ப்பித்துள்ளார். இந்த அறிக்கை குறித்து ஜெனீவாவில் அடுத்த மாதம் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது.
“போர்க் குற்றங்கள் குறித்து இலங்கை அரசு நியாயமாக விசாரிக்க தவறிய நிலையில் சர்வதேச விசாரணை அவசியமாகிறது” என்று நவநீதம் பிள்ளை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இதே கருத்தை பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் வலியுறுத்தி வருகின்றன.
“தீவிரவாத எதிர்ப்புச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும். போரின்போது காணாமல் போனவர்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும். சிறுபான்மை மக்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” எனவும் நவநீதம் பிள்ளை தனது அறிக்கையில் பரிந்துரை செய்துள்ளார்.