Last Updated : 29 Jun, 2016 03:44 PM

 

Published : 29 Jun 2016 03:44 PM
Last Updated : 29 Jun 2016 03:44 PM

2 மணி நேரத்தில் புற்று நோய் செல்களை அழிக்கும் புதிய சிகிச்சை முறை: ஆய்வில் தகவல்

புற்று நோய் செல்களை 2 மணி நேரங்களில் அழித்தொழிக்கும் புதிய சிகிச்சை முறையை அமெரிக்க ஆய்வாளர் கண்டுபிடித்துள்ளார்.

அதாவது அறுவை சிகிச்சை செய்ய முடியாத, சிகிச்சை எளிதில் சென்றடைய முடியாத புற்று நோய் கட்டிகளுக்கு இந்த புதிய சிகிச்சை முறை பலனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நைட்ரோபென்சால்டிஹைட் என்ற ஒரு ரசாயனத்தை புற்று நோய் கட்டிக்குள் ஊசி மூலம் செலுத்தி அது திசுவில் விரவி விடுமாறு செய்வது. பிறகு திசுவின் மீது ஒளிக்கற்றையைப் பாய்ச்சி உள்ளே செல்கள் அமிலமயமாகி செல்கள் தானாகவே தன் அழிவைத் தேடிக்கொள்ளும் புதிய சிகிச்சை முறையாகும் இது.

2 மணி நேரத்தில் 95% கேன்சர் செல்கள் அழிவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் ஆன்காலஜியில் இந்தக் கண்டுபிடிப்புகள் குறித்த கட்டுரை வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் டெக்ஸாஸ் பல்கலைக்கழக ஆய்வாளர் மேத்யூ ஜிடோவின் கூறும்போது, “பல்வேறு விதமான புற்று நோய்கள் இருந்தாலும், அவற்றிற்கிடையே உள்ள பொதுவான தன்மை என்னவெனில் தூண்டப்பட்டால் அவை தன்னைத்தானே அழித்து தற்கொலை செய்து கொள்ளும் ஒரு அம்சமே” என்கிறார்.

ஜிடோவின் இந்த முறையை டிரிபிள் நெகடிவ் மார்பகப் புற்று நோய்க்கு எதிராக பரிசோதித்தார். இவர் இதனை எலிப்பரிசோதனையில் சோதித்த போது புற்றுநோய் கட்டிகள் பரவலடைவதை தடுக்க முடிவதைக் கண்டுள்ளார்.

கீமோதெரபி அனைத்து செல்களையும் சிகிச்சைக்கான இலக்காக்குகிறது. ஒரு குறிப்பிட்ட கீமோதெரபி முறை கேன்சர் செல்களை அமிலமயமாக்குகின்றன இதன் மூலம் அந்தச் செல்கள் அழிக்கப்படுகின்றன. இதனால்தான் புற்று நோயாளிகள் பலர் தங்கள் தலைமுடியை முற்றிலும் இழக்க நேரிடுகிறது. மேலும் மீள முடியா நோய்வாய்பட்டவர்களாவே ஆகிவிடுகின்றனர். ஆனால் இந்த புதிய சிகிச்சை முறையில் குறிப்பிட்ட புற்று நோய் செல் மற்றும் கட்டி இலக்காக்கப்படுகிறது.

தற்போது மருந்துக்கும் போக்கு காட்டும் கேன்சர் செல்களில் ஜிடோவின் தற்போது இந்த தனது சிகிச்சை முறையை பரிசோதித்து வருகிறார். மேலும் உறுப்பு விட்டு உறுப்பு இடப்பெயர்வு கொள்ளும் கேன்சர் செல்களை அழிக்கும் நோனோபார்ட்டிக்கிளையும் ஜிடோவின் பரிசோதித்து வருகிறார்.

மேலும் இம்முறை வெற்றியடைந்தால் அதிக அளவில் கதிர்வீச்சு சிகிச்சை எடுத்துக் கொண்டு இனிமேல் தாங்காது என்ற நிலையில் இருக்கும் புற்று நோயாளிகளுக்கும் பயனளிக்கும் என்கிறார் ஜிடோவின்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x