தென் சீனக் கடல் பகுதியில் சீன கடற்படை போர் ஒத்திகை

தென் சீனக் கடல் பகுதியில் சீன கடற்படை போர் ஒத்திகை
Updated on
1 min read

தென்சீனக் கடல் பகுதியில் சீன கடற்படை போர்க்கப்பல்கள் போர் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளன. இதனால் அந்த பிராந்தியத்தில் பதற்றம் எழுந்துள்ளது.

சர்வதேச கடல் போக்குவரத்தின் முக்கிய பாதையாக திகழும் தென்சீனக் கடல் பகுதி முழுவதையும் சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இதேபோல அந்த பிராந்தியத்தில் அமைந்துள்ள தைவான், தங்களின் ஒருங்கிணைந்த பகுதி என்றும் சீனா வாதிட்டு வருகிறது.

இந்த இரு விவகாரங்களிலும் சர்வதேச நாடுகள் சீனாவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளன. தென் சீனக் கடல் பகுதி சர்வதேச எல்லைக்கு உட்பட்டது என்று அமெரிக்கா கூறிவருகிறது. தங்கள் கடல் பகுதியை சீனா ஆக்கிரமித்து வருவதாக வியட்நாம், பிலிப்பைன்ஸ், மலேசியா, புருணே உள்ளிட்ட நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன.

இந்த விவகாரங்களில் அமெரிக்கா, தைவானுக்கு சவால் விடுக்கும் வகையில் தென் சீனக் கடல் பகுதியில் சீன கடற்படை நேற்றுமுன்தினம் போர் ஒத்திகையை தொடங்கியது.

சீன கடற்படையைச் சேர்ந்த லியானிங் விமானம் தாங்கி போர்க்கப்பல் உட்பட ஏராளமான போர்க் கப்பல்கள் போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. அங்கு தற்போது நிலவும் மோசமான வானிலையிலும் லியானிங் கப்பலில் இருந்து போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மேலெழும்பி பறந்து குறிப்பிட்ட இலக்குகளைத் தாக்குகின்றன.

இந்தத் தகவல்களை சீன கடற்படை உறுதி செய்துள்ளது. எனினும் இது வழக்கமான போர் பயிற்சி, சர்வதேச சட்டத்துக்கு உட்பட்டு பயிற்சியில் ஈடுபட்டு வருகிறோம் என்று சீன கடற்படை தெரிவித்துள்ளது.

எனினும் சீனாவின் போர் ஒத்திகை உள்நோக்கம் கொண்டது, தென்சீனக் கடல் பகுதியை அபகரிக்க சீனா முயற்சிக்கிறது என்று தைவான், ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in