

துபையில் புதிதாக கட்டப்பட்டுள்ள சர்வதேச விமான நிலையம் பயணிகளின் பயன்பாட்டுக்காக திறந்துவைக்கப்பட்டுள்ளது. துபை உலக மைய (டி.டபிள்யூசி) பொருளாதார மண்டலத்தில் அமைந்துள்ள இந்த அல்-மக்டூம் சர்வதேச விமான நிலையம் வர்த்தக ரீதியாக ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
இந்த விமான நிலையத்துக்கு முதன்முதலாக விஸ் ஏர் நிறுவனத்தின் விமானம் புடாபெஸ்ட் நகரிலிருந்து வந்தடைந்தது.
"வர்த்தகம், தொழில், போக்குவரத்து, சரக்குப் போக்குவரத்து மற்றும் சுற்றுலா ஆகிய துறைகளில் துபையின் எதிர்கால வளர்ச்சியில் இந்த விமான நிலையம் மிக முக்கிய பங்கு வகிக்கும்" என துபை விமானப் போக்குவரத்து ஆணைய தலைவர் தெரிவித்தார்.
இந்த விமான நிலையம் முழு அளவில் செயல்பாட்டுக்கு வரும்போது, 5 ஓடுதளங்களுடன் உலகின் மிகப்பெரிய விமான நிலையமாக உருவெடுக்கும். ஆண்டுக்கு 16 கோடி பயணிகள் மற்றும் 1.2 கோடி டன் சரக்குகளைக் கையாளும் திறன் வாய்ந்ததாக இந்த விமான நிலையம் இருக்கும்.