Published : 11 Feb 2014 10:28 AM
Last Updated : 11 Feb 2014 10:28 AM

அமெரிக்காவின் பெரும் கொடையாளி மார்க் ஜுக்கர்பெர்க்: 2013-ல் ரூ.6,039 கோடி நன்கொடை வழங்கினார்

பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர் பெர்க் மற்றும் அவரது மனைவி பிரிஸில்லாசான் இருவரும் அதிக நன்கொடை வழங்கிய அமெரிக்கர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளனர். இந்த இளம் தம்பதி 2013-ம் ஆண்டு 97 கோடி அமெரிக்க டாலர்கள் (சுமார் 6,039 கோடி) சமூகப் பணிகளுக்காக நன்கொடையாக வழங்கியுள்ளனர்.

2013-ம் ஆண்டு அதிக நன் கொடை கொடுத்தவர்கள் 50 பேர் பட்டியலை தி குரோனிக்கில் ஆப் பிலெந்தராபி இதழ் வெளியிட்டுள்ளது. இதில், முதலிடத்தில் ஜுக்கர்பெர்க் மற்றும் அவரது மனைவி உள்ளனர்.

முதல் 50 இடங்களைப் பிடித்தவர்கள் மொத்தம் 770 கோடி அமெரிக்க டாலர்களை (சுமார் ரூ.47,940 கோடி) நன்கொடையாக அளித்துள்ளனர். 290 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள (சுமார் ரூ.18 ஆயிரத்து 55 கோடி) நன்கொடையாக வழங்குவதாக உறுதியளித்துள்ளனர்.

இது முந்தைய 2 ஆண்டுகளில் வழங்கப்பட்ட நன்கொடையின் ஒட்டு மொத்த அளவாகும். நாட்டின் பெரும் கொடையாளி யாக இருந்த சிலர் 2013-ம் ஆண்டின் பெரும் கொடையாளிகள் பட்டியலில் முதல் 50 இடத்தில் இடம்பெறவில்லை. காரணம் முந் தைய ஆண்டு வழங்குவதாக உறுதியளித்திருந்த தொகை, 2013-ல் கொடுக்கப்பட்டிருந்தாலும் அதனை முந்தைய 2012-ம் ஆண்டுக்கான நன்கொடையாகவே கணக்கில் எடுத்துக் கொள்ளப் பட்டது. இதனால் அவர்கள் அதிக தொகை வழங்கியிருந்தாலும், 2013-ம் ஆண்டுக்கான கணக்கில் குறைவான தொகையே பதிவாகி இருந்தது.

மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மெலிண்டா இருவரும் 18.13 கோடி அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ.1127 கோடி) நன்கொடையாக வழங்கியுள்ளனர். ஆனால், 2004- ம் ஆண்டு 330 கோடி அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ.20 ஆயிரத்து 545 கோடி) வழங்குவதாக உறுதி யளித்திருந்தனர். அத்தொகையில் இது கழிக்கப்பட்டு விட்டது.

சிஎன்என் நிறுவனர் டென்டர்னர், பெர்க் ஷையர் ஹாத்வே தலைவர் வாரன் பபெட் ஆகி யோர் ஏராளமான தொகையை நன்கொடையாக அளித்திருந்தனர்.

அதிக தொகை கொண்ட முதல் 30 நன்கொடைகள் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளன. அதேசமயம் இத்தொகை பெரும்பாலும் ஆராய்ச்சி மற்றும் அறிவியல் துறைகளுக்காகவே கொடுக்கப் பட்டுள்ளது. கட்டிடங்களுக்காகக் கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சிலர் இறப்புக்குப் பின் உயில் எழுதி வைத்து, அச்சொத்துகளும் நன்கொடையாக அளிக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவின் 50 பெரும் கொடையாளிகள் பட்டியலில் ஜார்ஜ் மிட்செல், 3-ம் இடத்தில் நைக் நிறுவன தலைவர் பிலிப் நைட் மற்றும் அவரது மனைவி பெனலோப், 4-ம் இடத்தில் நியூயார்க் முன்னாள் மேயர் மைக்கேல் புளூம்பெர்க் ஆகியோர் உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x