Last Updated : 13 Sep, 2016 04:49 PM

 

Published : 13 Sep 2016 04:49 PM
Last Updated : 13 Sep 2016 04:49 PM

பக்ரீத் திருநாளை காஷ்மீர் மக்களின் தியாகத்துக்கு அர்ப்பணிக்கிறேன்: நவாஸ் ஷெரீப்

இஸ்லாமியர்களின் புனிதப் பண்டிகையான பக்ரீத் திருநாளை காஷ்மீர் மக்களின் தியாகத்துக்கு அர்ப்பணிப்பதாக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.

இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை, நவாஸ் ஷெரீப் நாட்டு மக்களுக்கு அளித்த செய்தியில் கூறியிருப்பதாவது, "நாம் காஷ்மீர் மக்களின் தியாகங்களை புறக்கணித்து விட முடியாது.

காஷ்மீர் மக்கள் அவர்களது தியாகங்கள் மூலம் நிச்சயம் வெற்றியடைவார்கள். நான் இந்த பக்ரீத் திருநாளை காஷ்மீர் மக்களின் உயர்ந்த தியாகங்களுக்காக அர்பணிக்கிறேன். காஷ்மீர் பிரச்சினை முடிவுக்கு வரும் வரை நாம் காஷ்மீருக்காகவும், அந்த மக்களுக்காகவும் தொடர்ந்து போராடுவோம்.

காஷ்மீர் மக்கள் இந்தியாவிடமிருந்து விடுதலை பெற மூன்று தலைமுறைகளாகப் போராடி வருகின்றனர். அவர்கள் தங்களது சுய நிர்ணய உரிமையை பெற இந்திய அட்டூழியங்களை பொறுத்து கொள்கின்றனர். அவர்களது குரலை அடக்குமுறையால் யாரும் அடக்கிவிட முடியாது" என்றார்.

பாகிஸ்தான் அதிபர் மம்னூன் ஹூசைன் நாட்டு மக்களுக்கு அளித்த செய்தியில், "நாம் காஷ்மீர் மக்களுக்கு உறுதுணையாக இருப்பது அவசியம். நம் சகோதரர்கள் மோசமான அடக்குமுறையை அனுபவித்து வருகின்றனர். காஷ்மீர் மக்கள் தங்களுக்கு எதிராக கட்டமைக்கப்பட்டுள்ள அடக்குமுறைகளை உடைத்து வெளியே வரும் காலம் வெகு தொலைவில் இல்லை.

அப்போது அவர்கள் சுதந்திர நிலத்தில் இருந்துகொண்டு இத்தகைய விழாக்களைக் கொண்டாடுவார்கள்" என்று கூறினார் .

ஜமாத் உத்தவா அமைப்பின் தலைவரும், மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்டவருமான ஹபீஸ் சயீத் வெளியிட்டுள்ள் செய்தியில், ''நான் காஷ்மீர் மக்கள் இந்தியப் படைக்கு எதிராக வெற்றி பெறப் பிரார்த்தனை செய்தேன். நவாஸ் அரசு, காஷ்மீர் மக்கள் விடுதலை பெற உதவ வேண்டும்" என்று கூறியுள்ளார்.

ஜுலை 8ஆம் தேதி ஹிஸ்புல் முஜாகிதின் தளபதி இந்திய ராணுவத்தால் கொல்லப்பட்டது முதல் காஷ்மீரில் கலவரம் வெடித்தது. அதனை தொடர்ந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் உறவில் விரிசல் அதிகமானது. காஷ்மீர் மக்கள் மீது இந்திய ராணுவத்தினர் மனித உரிமை மீறல் போன்ற செயல்களில் ஈடுபடுவதாக பாகிஸ்தான் குற்றம் சுமத்தி வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x