

அதிக தொகைக்கு அலைக் கற்றைகள் ஏலத்தில் எடுக்கப் பட்டுள்ளதால் செல்போன் கட்டணம் உயர்வதற்கு அதிக வாய்ப்புள்ளது. ஆனால், தொழில் போட்டி எனும் காரணி கட்டண உயர்வைத் தடுக்கும் என எதிர்பார்ப்பதாக இந்திய தொலைத்தொடர்புத் துறைச் செயலர் எம்.எப். பரூக்கி தெரிவித்துள்ளார்.
ஸ்பெயின் நாட்டின் பார்சி லோனாவில் உலக மொபைல் மாநாடு நடந்து வருகிறது. இதில் பங்கேற்ற இந்திய தொலைத் தொடர்புத் துறைச் செயலர் எம்.எப். பரூக்கி கூறியதாவது:
செல்போன் கட்டணங்கள் உயரக்கூடாது என நான் விரும்புகிறேன். நான் தொலைத் தொடர்புச் சேவை நிறுவனமோ, ஒழுங்குமுறை ஆணையமோ அல்ல. ஆனால், இரு காரணிகள் இணைந்து செல்போன் கட்டண உயர்வைத் தடுக்கும் என உறுதியாகக் கூறுகிறேன்.
கட்டண உயர்வைத் தடுப்பதில் தொழில்போட்டி ஒரு காரணியாக இருக்கும். சந்தையில் தாங்கள் பின்தங்குவதை எந்த நிறுவனமும் விரும்பாது என்பதால், அவை கட்டண உயர்வைச் செயல்படுத்தாது. தொழில்நுட்பம் கட்டண உயர்வைத் தடுக்கும் 2-வது காரணியாகும். ஏற்கெனவே சந்தையில் இருக்கும் நிறுவனங் கள் சீரான இடைவெளியில் அவ் வப்போது புதிய சேவைகளை அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கும் என அவர் தெரிவித்தார்.
பார்தி ஏர்டெல்,வோடபோன், ஐடியா செல்லுலார் உள்பட 8 நிறுவனங்கள் அண்மையில் இந்தியாவில் நடைபெற்ற அலைக்கற்றை ஏலத்தில் ரூ. 61,162 கோடி அளவுக்கு அலைக் கற்றைகளை ஏலத்தில் எடுத்தது குறிப்பிடத்தக்கது. ஒரே சமயத்தில் முழு ஏலத் தொகையையும் செலுத்தும்படி அரசு கோராது என, பரூக்கி குறிப்பிட்டார்.