

கேரளாவில் இருந்து நேற்று காலை புறப்பட்ட எமிரேட்ஸ் விமானம் (இகே521), துபாயில் தரையிறங்கும் போது தீப்பிடித்தது. இந்த விபத்தில் பயணிகளின் உயிருக்கு ஆபத்தில்லை. எனினும், விமானம் ஓடுதளத்தில் மோதியதால் ஏற்பட்ட அதிர்வு மற்றும் புகை காரணமாக சிலருக்கு காயமும், மூச்சுத் திணறலும் ஏற்பட்டதாக தெரிகிறது.
கேரள மாநிலம் திருவனந்தபுரத் தில் இருந்து நேற்று புதன்கிழமை பகல் 10.19 மணிக்கு, போயிங் 777 விமானம் (இகே521) துபாய் நோக்கி புறப்பட்டது. இதில் 282 பயணிகள் மற்றும் 18 பணியாளர்கள் இருந்த னர். இவர்களில் 226 பேர் இந்தியர்கள்.
பகல் 12.45 மணிக்கு துபாய் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்ட விமானம், திடீரென கட்டுப்பாட்டை இழந்து, தாறுமாறாக ஓடி, ஓடுதளத்தை மோதியபடி, நின்றது. முன்னதாக, விமானத்தின் இன்ஜின் பகுதியில் இருந்து பாகம் ஒன்று உடைந்து விழுந்ததாகவும், வெடிச் சத்தம் கேட்டதாகவும் கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து, விமானத் தின் ஒரு பகுதியில் தீப்பிடித்து, அதில் இருந்து கரும்புகை வெளி யானபடி இருந்தது. உடனடியாக விமானத்தில் இருந்து அவசரகால வழியின் மூலம் பயணிகள் வேக மாக வெளியேறினர். அனைத்து பயணிகளும், பணியாளர்களும் விமானத்தில் இருந்து வெளி யேற்றப்பட்டு, அங்கிருந்து பேருந்து மூலம் பாதுகாப்பான பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
விபத்துக்கான காரணத்தை எமிரேட்ஸ் நிறுவனம் உனடியாக அறிவிக்கவில்லை. முதலில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்துவிட்டு பின்னர் ஆய்வு மேற்கொள்ளப்படும் என, எமிரேட்ஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
விபத்து குறித்து பயணி ஒருவர் குறிப்பிடும்போது, ‘விமானம் வழக்கம் போல தரையிறங்காமல், திடீரென கீழ்நோக்கி இறங்கியது. பின்னர், தரையை வேகமாக மோதியது. திடீர் திடீரென மேல் நோக்கி குலுங்கியது. அதற்குள் கேபினுக்குள் புகை சூழந்துவிட்டது. எந்த முன்னறிவிப்பும் தரப்படவில்லை. அவசரகால கதவை உடைத்து வெளியேறினோம்’ என்றார்.
விமானத்தில் இருந்து அனைவரும் தப்பிவிட்டோம். எனினும், சிலருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார். அதோடு, தரையிறங்கும் சமயத்தில் ஓடுதளத்தில் விமானம் மோதியதால் ஏற்பட்ட அதிர்வுகளால் சிலருக்கு கை, கால்களில் காயம் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.
ஆனால், பயணிகள் யாருக்கும் பாதிப்பில்லை என, எமிரேட்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இவ்விபத்து காரணமாக, துபாய் விமான நிலையத்தில் அனைத்து விமானங்களின் வருகை மற்றும் புறப்பாடு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. நிலைமை சீரடைந்த பின் விமானங்கள் மீண்டும் இயக்கப்பட்டன.
விபத்துக்குள்ளான போயிங் 777 விமானம், 2003 மார்ச் மாதம் வாங்கப்பட்டது.
உதவி எண்கள்
எமிரேட்ஸ் அறிவித்த அவசர உதவி எண்கள்:
திருவனந்தபுரம் : 04713377337
ஐக்கிய அரபு அமீரகம் : 8002111
அமெரிக்கா : 0018113502081