

கலிபோர்னியாவைச் சேர்ந்த 31 வயது அலெக்ஸ் ஹன்னோல்ட் மிகச் சிறந்த மலையேற்ற வீரர். உயிருக்கு உத்திரவாதமில்லாத மிக ஆபத்தான செங்குத்து மலையில், கைகளையும் கால்களையும் பயன்படுத்தி, 3 மணி 56 நிமிடங்களில் மலை உச்சியை அடைந்தார். கிரானைட் மலையில் கைகள் வழுக்காமல் இருப்பதற்காக இடுப்பில் கட்டியிருந்த பையில் உள்ள சுண்ணாம்புத் தூளைப் பயன்படுத்திக்கொண்டார். ஜூன் 4-ம் தேதி இந்த முயற்சியை மேற்கொள்வதற்கு முன்பு பலமுறை கயிற்றைக் கட்டிக்கொண்டு மலையேறியிருக்கிறார். எங்கெல்லாம் கைகளால் பிடித்துக்கொள்ள முடியும் என்பதை சாக்பீஸால் குறித்து வைத்துவிட்டார். அதனால் கொஞ்சம் எளிதாக அவரால் ஏற முடிந்தது. இந்த சாதனையைச் செய்ததன் மூலம், எந்தக் காலத்திலும் தனி நபர் செய்த சிறந்த சாதனையாக இது நிலைத்திருக்கும் என்கிறார்கள் நிபுணர்கள். “எத்தனையோ தடவை மலையேற்றம் செய்தாலும் கயிறும் பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் மலையேறியது மிகவும் கடினமான காரியமாகவே இருந்தது. சில இடங்களில் கைகளையும் கால்களையும் வைப்பதற்குக் கூட வசதியான இடம் அமையவில்லை. கொஞ்சம் பயந்தாலும் கவனம் சிதறினாலும் உயிருக்கே ஆபத்தாக அமைந்துவிடும் என்பதை அறிந்தேதான் மலையேறினேன். கை, கால் கட்டை விரல்களுக்குதான் அதிக வேலை. சாதித்த பிறகு கிடைத்த சந்தோஷத்துக்கு உலகில் ஈடு எதுவும் இல்லை” என்கிறார் அலெக்ஸ். பயமில்லாத அணுகுமுறையைப் பார்த்து வியந்த விஞ்ஞானிகள், இவரது மூளையை ஆராய விரும்புகிறார்கள்.
துணிச்சல்காரர்!
நியூசிலாந்தைச் சேர்ந்த 14 வயது டேட்டனுக்கு பிறக்கும்போதே அரிய குறைபாடு இருந்தது. பால் குடிக்கும் பருவத்தைக் கடந்து, திட உணவுகளை ஊட்டும்போதுதான் குறைபாடு தெரியவந்தது. எந்தத் திட உணவைக் கொடுத்தாலும் இவனால் மெல்ல முடியாது. வாய்க்குள் போட்ட வேகத்தில் விழுங்கிவிடுவான். இது வயிற்றுப் பிரச்சினையைக் கொண்டு வந்துவிட்டது. மருத்துவர்கள் வயிற்றில் ஒரு சிறிய இயந்திரத்தைப் பொருத்தி, அதன்மூலம் உணவுகளைச் செலுத்தி வந்தனர். இவனது குறைபாட்டைச் சரி செய்யும் முயற்சியிலும் இறங்கினர். திடீரென்று இதயக் கோளாறும் ஏற்பட்டது. சூழல் சிக்கலானது. மருத்துவமனையிலேயே இருக்க வேண்டியதாகிவிட்டது. இவனைப் பற்றிய செய்தி வெளியில் தெரிந்தது. ஒரு மருத்துவப் பல்கலைக்கழகம் டேட்டனுக்கு உதவ முன்வந்தது. கொஞ்சம் கொஞ்சமாகக் குணமடைந்தான். பதினோராவது பிறந்த நாள் அன்று குடும்பத்தினரோடு அமர்ந்து திட உணவுகளை மென்று சாப்பிட்டான். அவனும் குடும்பத்தினரும் மகிழ்ச்சியில் திளைத்தனர். தற்போது இதய அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டு நன்றாக தேறிவிட்டான். “பல்வேறு பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட டேட்டன், கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளை மருத்துவமனையிலேயே கழித்திருக்கிறான். வெளியில் எங்குமே சென்றதில்லை. மக்கள் அதிகம் இருக்கும் இடங்களுக்குச் சென்றால் அலர்ஜி ஏற்பட்டுவிடும். இவனும் நாங்களும் சொல்ல முடியாத கஷ்டங்களை அனுபவித்துவிட்டோம். இனி நிம்மதி” என்கிறார் அம்மா லூக்.
ஐயோ… பாவம்…