Published : 28 Nov 2013 12:00 AM
Last Updated : 28 Nov 2013 12:00 AM

புத்தரின் காலம் கி.மு. 6 ஆம் நூற்றாண்டு! - பழமையான புத்த விஹாரை தோண்டியெடுப்பு

புத்தரின் பிறப்பிடமான நேபாளத்தில் மிகப் பழமையான புத்த விஹாரையை (கோவில்) தொல்லியல் துறையினர் அகழாய்வு செய்து கண்டறிந்துள்ளனர். அங்குள்ள தொல்லியல் படிமங்களை ஆய்வு செய்ததில் புத்தர் கி.மு. 6 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்திருக்கக்கூடும் எனத் தெரியவந்துள்ளது. இதற்கு முன்பு கி.மு. 4 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்திருக்க வேண்டும் எனக் கருதப்பட்டது.

நேபாளம் லும்பினியில் உள்ள மாயாதேவி கோவில் யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய இடமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த இடம்தான் புத்தரின் பிறந்த இடமாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளது. அப்பகுதியில் தொல்லியல் ஆய்வாளர்கள், அகழ்வாராய்ச்சி மேற்கொண்டனர். அப்போது செங்கற்களால் கட்டப்பட்ட தொடர் புத்த விஹாரைகளின் கீழ் கி.மு. 6 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மரத்தால் ஆன விஹாரை இருந்தது. அதனை அகழாய்வு செய்து தொல்லியல் துறையினர் வெளிக்கொணர்ந்தனர். இதுவரை கண்டறியப்பட்ட புத்த விஹாரைகளில் இதுவே மிகப் பழமையானதாகும்.

புத்தரின் வாழ்வில் நேரடியாகத் தொடர்புடைய பொருள்களில் தொல்லியல் துறைக்குக் கிடைத்த முதல் பொருள், இக்கோவிலாகும். மேலும், புத்தமதம் இங்குதான் மலர்ந்திருக்க வேண்டும் எனவும் கருதப்படுகிறது. இந்த ஆய்வை பிரிட்டனின் துர்ஹாம் பல்கலைக்கழக பேராசிரியர் ராபின் கன்னிங்ஹம் தலைமையிலான தொல்லியல் குழு மேற்கொண்டது.

மரத்தாலான இந்த மிகப் பழமையான புத்த விஹாரையின் மையப்பகுதியில் வெற்று இடம் உள்ளது. லும்பினி தோட்டத்தில் மரத்தின் கிளையைப் பிடித்தபடி ராணி மாயாதேவி புத்தரைப் பிரசவித்த கதையுடன் இதற்கு தொடர்பு உள்ளது.

இந்த வெற்றிடத்தின் மையத்தில் மரம் இருந்திருக்க வேண்டும் என தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், மிகப் பழமையான அந்த மரத்தின் வேர்களும் கிடைத்துள்ளன.

3 ஆம் நூற்றாண்டா?

இதுவரை கிடைத்த தொல்லியல் ஆய்வுகளில் கி.மு. 3- ம் நூற்றாண்டுக்கு முற்பட்டவை எதுவும் கிடைக்கவில்லை. பேரரசர் அசோகர் காலத்துச் சான்றுகள் மட்டுமே கிடைத்துள்ளன.

பேராசிரியர் கன்னிங்ஹம் மேலும் கூறியதாவது: கல்வெட்டு உள்ளிட்ட எழுத்துப்பூர்வ ஆதாரங்கள் மற்றும் கர்ணபரம்பரைக் கதைகள் மூலம் புத்தரின் வாழ்க்கை குறித்து மிகச் சில தகவல்களே தெரியவந்துள்ளன. சில ஆய்வாளர்கள் புத்தர் கி.மு. 3 ஆம் நூற்றாண்டில் பிறந்ததாகக் கூறி வருகின்றனர். இதில் பல்வேறு மாறுபட்ட கருத்துகள் உலவுகின்றன. அவர் கி.மு. 4 ஆம் நூற்றாண்டில் பிறந்தவர் என்றும் 80 வயது வரை வாழ்ந்தவர் என்றும் கருத்துகள் உள்ளன. தற்போது, முதன்முறையாக, கி.மு. 6 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட (புத்தர் சார்ந்த) தொல்லியல் படிமங்கள் கிடைத்துள்ளன என்றார்.

நேபாள அரசாங்கம் இந்த இடத்தைப் பாதுகாப்பதில் போதிய முயற்சி எடுக்கவில்லை என துர்ஹாம் பல்கலைக்கழக தொல்லியல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த இடத்தில் அகழ்வாய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படவுள்ளதால், புத்தர் தொடர்புடைய மேலும் பல தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x