Published : 09 Apr 2017 08:11 AM
Last Updated : 09 Apr 2017 08:11 AM

உலக மசாலா: இது என்ன விநோதமான நோயாக இருக்கிறது!

வியட்நாமைச் சேர்ந்த 58 வயது லூ காங் ஹுயென், 35 ஆண்டுகளாக நகங்களை வெட்டாமல் வளர்த்து வருகிறார். நகத்தை வெட்டினால் உடல் நலம் பாதிக்கப்பட்டு மாதக்கணக்கில் படுக்கையில் இருக்க வேண்டியிருப்பதால் நகங்களை வெட்டுவதில்லை என்கிறார். “முதலில் ஜாலியாக நகங்களை வளர்க்க ஆரம்பித்தேன். ஒருகட்டத்தில் நகங்களால் இடையூறு ஏற்பட வெட்டிவிட்டேன். உடனே உடல்நிலை மிகவும் மோசமானது. பல மருத்துவர்களைப் பார்த்தும் காரணத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு வருடம் படுக்கையில் இருந்தேன். பிறகு உடல் தேறி, நகங்களை வெட்டியபோது மீண்டும் உடல்நிலை மோசமானது. நகங்களுக்கும் உடலுக்கும் ஏதோ தொடர்பு இருப்பதாக நினைத்தேன். அதிலிருந்து நகங்களை வெட்டாமலும் உடையாமலும் பாதுகாத்து வருகிறேன். ஒரு நகம் தானாக உடைந்தாலும் சில மாதங்கள் படுக்கையில் விழுந்துவிடுவேன். இதனால் என் மனைவியும் குடும்பத்தினரும் நகங்களை வெட்ட அனுமதிப்பதில்லை. பார்ப்பதற்கு உறுதியாகத் தோன்றினாலும் ரொம்ப எளிதாக உடைந்துவிடும். தண்ணீர் பட்டால் உடையும் என்பதால் நகங்கள் மீது தண்ணீர் படாமல் குளிப்பேன். அதனால் அடிக்கடி குளிப்பதில்லை. உணவைக் கூட மனைவிதான் ஊட்டிவிட வேண்டும். மழை வரும்போது நகங்களை மட்டும் பிளாஸ்டிக் பையால் மூடிவிடுவேன். உடைகளைப் போடும்போதுதான் அதிக சிரமத்துக்கு உள்ளாகிறேன். இரவில் இரண்டு பக்கங்களிலும் தலையணைகளை வைத்து நகங்களைக் கிடத்தி வைத்திருப்பேன். தூக்கத்தில் கூடப் புரண்டு படுக்க முடியாது. வண்டி ஓட்டினாலும் சிரமமாகவே இருக்கும். ஒருமுறை விபத்தில் மாட்டிக்கொண்டேன். என்னைக் காப்பாற்றிக்கொள்வதைவிட நகங்களைத்தான் காப்பாற்ற நினைத்தேன். சிலர் நகங்களைக் கொடுத்தால் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருவதாகச் சொல்கிறார்கள். எப்படிக் கொடுப்பேன்? சுவர்களில் ஓவியம் தீட்டுவதுதான் என் தொழில். எவ்வளவு சிரமம் இருந்தாலும் அதை மட்டும் விட்டுவிடவில்லை. குழந்தைகள் என்னைப் பார்த்தாலே பயந்து அலறுவார்கள். பெரியவர்கள் பாராட்டுவார்கள். 55 செ.மீ. நீளமிருக்கும் என் நகங்களை கின்னஸில் இடம் பெறச் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது” என்கிறார் லூ காங்.

இது என்ன விநோதமான நோயாக இருக்கிறது!

ண்டர்நேஷனல் ஃபுட் இன்ஃபர்மேஷன் கவுன்சில் தினமும் 300 மி.கி. கஃபீன் எடுத்துக்கொள்ளலாம் என்கிறது. ஃபுட் அன்ட் ட்ரக் அட்மினிஸ்ட்ரேஷன் தினமும் 400 மி.கி. கஃபீன் சாப்பிடலாம் என்கிறது. ஆனால் ஒரு கப் பிளாக் இன்சோம்னியா காபியில் 702 மி.கி. கஃபீன் இருக்கிறது. இரவில் இதை எடுத்துக்கொண்டால் நிச்சயம் உடல் ஆரோக்கியம் பாதிக்கும் என்கிறார்கள். 2016-ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் சியான் கிறிஸ்டஃபர் என்ற காபி பிரியரால், பிளாக் இன்சோம்னியா காபி உருவாக்கப்பட்டது. உலகிலேயே மிகவும் ஸ்ட்ராங்கான காபியை உருவாக்க வேண்டும் என்பதே இவரின் நோக்கம். கடந்த ஜுன் மாதம் கேப் டவுனின் சில காபி கடைகளில் பிளாக் இன்சோம்னியா காபி கிடைத்தது. அக்டோபர் மாதம் உலகின் 22 நாடுகளில் விற்பனைக்கு வந்துவிட்டது. அதிகமான கஃபீனை உட்கொண்டால் ரத்தநாளங்கள் சுருங்குவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x