Published : 08 Sep 2016 09:26 AM
Last Updated : 08 Sep 2016 09:26 AM

உலக மசாலா: டெஸ்க் சைக்கிள்!

அமெரிக்காவின் வட கரோலினா பகுதியில் உள்ள வேக் கவுன்டி பள்ளியின் மாணவர்கள் கணித வகுப்பில் கவனம் செலுத்தாமல் இருந்தனர். கணித ஆசிரியர் பெதானி லாம்பெத், மாணவர்களின் கவனத்தை ஈர்க்க புதிய முறையை புகுத்த விரும்பினார். மாணவர்களின் மேஜைக்கு அடியில் ஒரு சைக்கிளைப் பொருத்தினார்.

தங்கள் கவனம் சிதறும்போதும் கவனிக்க ஆர்வம் இல்லாதபோதும் சைக்கிளை, கால்களால் மிதிக்க வேண்டும். இப்படிச் செய்யும்போது கவனம் ஒரே இடத்தில் நிலைகொண்டு விடுகிறது. “முன்பெல்லாம் பாடம் நடத்திக் கொண்டிருக்கும்போதே அருகில் இருக்கும் மாணவர்களைத் தொட்டுக்கொண்டிருப்பார்கள். மேஜையைத் தட்டிக்கொண்டிருப்பார்கள். இப்போது கால்கள் சைக்கிளை மிதிப்பதால் மேஜையைத் தட்டுவதும் இல்லை. அருகில் இருப்பவர்களிடம் பேசுவதும் இல்லை. கால்கள் சைக்கிளை மிதித்துக்கொண்டிருந்தாலும் பாடம் நடத்துவதில் கவனம் குவிகிறது.

சைக்கிள் வருவதற்கு முன்பு இருந்த மாணவர்களின் கற்கும் திறனுக்கும் சைக்கிள் வந்த பிறகு மாணவர்களின் கற்கும் திறனுக்கும் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. சைக்கிள் மாணவர்களை எப்பொழுதும் உற்சாகமாக வைத்திருக்கிறது” என்கிறார் பெதானி லாம்பெத். ஒரு சைக்கிளின் விலை 10 ஆயிரம் ரூபாய். நன்கொடைகள் பெற்று, ஒரு வகுப்பில் பரிசோதனை முயற்சியாக சைக்கிள்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. “முன்பெல்லாம் பாடம் நடத்திக் கொண்டிருக்கும்போது ஏதாவது நினைத்துக்கொண்டிருப்பேன், புத்தகத்தில் கிறுக்கிக்கொண்டிருப்பேன். இப்போது கால்கள் மட்டும் வேகமாக இயங்குகின்றன. கவனம் முழுவதும் பாடத்தில் இருக்கிறது. சைக்கிள் மிதிப்பது உடல் பயிற்சியாகவும் இருக்கிறது. மிகவும் உற்சாகமாக இருக்க வைக்கிறது. காலை 10 மணிக்குள் 133 கலோரிகள் எரிக்கப்பட்டு விடுவதால் உடலுக்கும் நல்லது” என்கிறார் மாணவர் ஒருவர்.

மாணவர்களின் கவனத்தை ஒருமுகப்படுத்தும் டெஸ்க் சைக்கிள்!

நியூயார்க்கைச் சேர்ந்த ஃபேஷன் டிசைனர் ஜியோவா ரோட்ரிகுயஸ், iBag2 என்ற கைப்பையை அறிமுகம் செய்திருக்கிறார். ஷாப்பிங் செல்லும்போது இந்தப் பையை எடுத்துச் சென்றால், தேவைக்கு அதிகமாக வாங்கும்போது எச்சரிக்கை செய்யும். தேவை இருக்கிறதோ, இல்லையோ பொருட்களை வாங்க வேண்டும் என்ற சிந்தனை உள்ளவர்களுக்கு இந்தப் பை மிகவும் பயன்படும்.

அதாவது அதிகமாக பில் வரும்போது பையில் இருந்து வெளிச்சம் வந்து, ‘இனிமேல் வாங்க வேண்டாம்… ஆபத்தான கட்டத்தில் இருக்கிறீர்கள்’ என்று எச்சரிக்கிறது. இந்தப் பை சிறிய ரோபோ தொழில் நுட்பம் மூலம் இயங்குகிறது. “பணத்தைப் பற்றிக் கவலை கொள்ளாமல் செலவு செய்கிறவர்களுக்காகவே இதை உருவாக்கியிருக்கிறோம். பையை சார்ஜ் செய்துகொள்ள வேண்டும். வெளியே செல்லும்போது பையிலிருந்து மொபைல் போனுக்கும் சார்ஜ் செய்துகொள்ள முடியும். ஒரு பையின் விலை சுமார் 3 லட்சம் ரூபாய். தேவையின்றி செலவு செய்வதை விட, இந்தப் பைக்கு செலவு செய்து, எதிர்காலத்தில் பணத்தை மிச்சப்படுத்தலாம்” என்கிறார் ஜியோவா ரோட்ரிகுயஸ்.

ஒரு செலவைக் கட்டுப்படுத்த இன்னொரு செலவு…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x