

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் ஈரான் தூதரகம் அருகே செவ்வாய்க்கிழமை இரு குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. இதில் 23 பேர் கொல்லப்பட்டனர். 146 பேர் காயமடைந்துள்ளனர்.
ஷியா முஸ்லிம்களின் ஹிஸ்புல்லா அமைப்பினரின் ஆதிக்கம் அதிகமுள்ள பகுதியில் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளதால், இது சன்னி முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த பயங்கரவாதிகளின் தாக்குதலாக இருக்கும் என்று சந்தேகிக்கப்படுகிறது.
முதல் குண்டு வெடித்த உடன் தூதரகம் அருகே நின்றுகொண்டிருந்த மக்கள் அனைவரும் சிதறி ஓடினர். குண்டு வெடிப்பால் அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தன. அடுத்த சில விநாடிகளிலேயே தூதரகத்தில் இருந்து சில அடி தூரத்தில் 2-வது குண்டு வெடித்தது.
இவை இரண்டுமே தற்கொலைப் படை பயங்கரவாதிகளால் நிகழ்த்தப்பட்டவை என்று லெபனான் போலீஸார் உறுதி செய்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்த இரு பயங்கரவாதிகள், தூதரகத்தின் கேட் அருகே வந்த உடன் தங்கள் உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்தனர். சிறிது நேரத்தில் அதே பகுதியில் இருந்த மற்றொரு பயங்கரவாதியும் வெடித்துச் சிதறியுள்ளார்.
இத்தாக்குதலில் ஈரான் தூதரக அதிகாரி ஒருவரும் உயிரிழந்துள்ளார்.
ஈரானின் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பினர், சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரில் அதிபர் ஆசாதுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர். அதே நேரத்தில் சன்னி முஸ்லிம்கள் ஆசாத் அரசுக்கு எதிராக போரிட்டு வருகின்றனர். எனவே சிரியாவில் நடைபெற்று வரும் போரின் தொடர் விளைவுதான் இந்த குண்டு வெடிப்பு என்று தெரியவந்துள்ளது. சிரியாவும் லெபனானும் அண்டை நாடுகள்.