

இரண்டு ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் சிரியா அதிபர் அல் பஷார் அஸாத்துடன் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தொலைபேசியில் பேசினார்.
சிரியா தலைநகர் டமாஸ்கஸின் புறநகர்ப் பகுதியில் கடந்த ஆகஸ்டில் பொதுமக்கள் மீது ரசாயன குண்டுகள் வீசப்பட்டதில் சுமார் 1,500 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் சிரியா அதிபர் அஸாதுக்கு எதிராக போர் நடவடிக்கை எடுக்க முடிவெடுத்தன.
எனினும் ரஷ்ய அதிபர் புதினின் தலையீட்டால் சிரியாவுக்கு எதிரான தாக்குதல் முயற்சி கைவிடப்பட்டது. இதைத் தொடர்ந்து ரசாயன ஆயுதங்களை அழிக்க அந்த நாடு ஒப்புக் கொண்டு அதற்கான பணிகள் ஐ.நா. மேற்பார்வையில் இப்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் சிரிய அதிபர் அல் பஷார் அஸாத்துடன் ரஷ்ய அதிபர் புதின் தொலைபேசியில் பேசினார்.
சிரியா அரசு மற்றும் எதிர்க்கட்சிகள் பங்கேற்கும் அமைதிப் பேச்சுவார்த்தை ஜெனீவாவில் டிசம்பர் 12-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க சிறப்புக் குழுவை அனுப்ப சிரியா அரசு முன்வந்துள்ளது. அதனை புதின் பெரிதும் பாராட்டினார்.
ரசாயன ஆயுதங்களை அழிக்க சிரியா அரசு முழுஒத்துழைப்பு அளிப்பதாகவும் அந்தப் பணிகள் திருப்திகரமாக நடைபெறுவதாகவும் புதின் கூறினார்.
சிரியாவுக்கும், அதன் மக்களுக்கும் ரஷ்யா அளித்த உதவிக்கு தனது நன்றியை அஸாத் தெரிவித்தார்.
சிரியாவில் 2011-ல் உள்நாட்டுப் போர் ஏற்பட்டது. எதிர்ப்பாளர்களை அடக்க ராணுவம் களமிறக்கப்பட்டது. இதன் பின்னர் அஸாத்துக்கும் புதினுக்கும் இடையே எவ்வித பேச்சுவார்த்தையும் இல்லை. இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் இப்போது தொலைபேசியில் பேசியுள்ளனர்.