

பலுசிஸ்தான் குடியரசுக் கட்சி தலைவரும் நிறுவனருமான பிரஹம்தாக் பக்டிக்கு இந்தியா அடைக்கலம் கொடுத்தால் அது, “தீவிரவாதத்திற்கு அதிகாரபூர்வ ஆதரவு” என்றே அர்த்தம் என்று பாகிஸ்தான் எச்சரித்துள்ளது.
இது குறித்து பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் தனது ட்விட்டரில், “பக்டிக்கு இந்தியா அடைக்கலம் அளிக்க முன்வருவது ஒரு அரசே பயங்கரவாதியை வளர்ப்பதாகும். இதன் மூலம் இந்தியா தீவிரவாதத்தை அதிகாரப்பூர்வமாக வளர்க்கும் நாடாகும்” என்று பதிவிட்டுள்ளார்.
பலுசிஸ்தான் குடியரசுக் கட்சித் தலைவர் பிரஹம்தாக் பக்டி இந்தியாவில் அரசியல் அடைக்கலம் கேட்டு விண்ணப்பம் செய்துள்ளதாகவும் அதனை மத்திய உள்துறை அமைச்சகம் ஆராய்ந்து வருவதாகவும் எழுந்த செய்திகளை அடுத்து கவாஜா ஆசிப் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சுவிட்சர்லாந்தில் வசித்து வரும் பக்டி செவ்வாயன்று அங்குள்ள இந்திய தூதரகத்தை இது குறித்து அணுகினார்.
2006-ம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவத்தினரால் கொல்லப்பட்ட பலுசிஸ்தான் தேசியவாதி நவாப் அக்தர் பக்டியின் மகன் தான் இவர்.
பிரஹம்தாக் பக்டி 2010-ல் ஆப்கன் வழியாக பாகிஸ்தானிலிருந்து ஜெனிவா செல்வதற்கு இந்தியா உதவியதாக பாகிஸ்தான் குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.