

பாகிஸ்தான் முன்னாள் ராணுவ ஆட்சியாளர் பர்வீஸ் முஷாரப் மீது சுமத்தப்பட்டுள்ள தேசத்துரோக குற்றச்சாட்டுகளை விசாரிக்க பாகிஸ்தான் அரசு சிறப்பு நீதிமன்றம் அமைத்துள்ளது.
ராணுவ ஆட்சியாளர் ஒருவர் மீது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஒன்று வழக்கு நடத்துவது இதுவே முதல்முறை.
“சிறப்பு நீதிமன்றத்துக்கு நியமிக்கப்படும் நீதிபதிகளை தேர்வுசெய்து அதற்கான ஒப்புதலை கொடுத்துவிட்டார் பிரதமர் நவாஸ் ஷெரீப். சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது பற்றி அறிவிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது” என்று பிரதமர் அலுவலக மூத்த அதிகாரி ஒருவர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
மூத்த நீதிபதியாக விளங்கும் சிந்து உயர்நீதிமன்ற நீதிபதி பைசல் அராப் சிறப்பு நீதிமன்றத்தின் தலைவராக செயல்படுவார்.
பலுசிஸ்தான் உயர்நீதிமன்ற நீதிபதி சையது தஹீரா சப்தால், லாகூர் உயர்நீதிமன்ற நீதிபதி யவார் அலி ஆகியோர் பிற நீதிபதிகள் .
2007ம் ஆண்டில் நெருக்கடி நிலையை பிரகடனப் படுத்தி அரசமைப்புச் சட்டத்தையே அதிகார மற்றதாக்கினார் என முஷாரப் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனைக்குரிய குற்றங்கள் இவை.
தேசத்துரோக குற்றச்சாட்டு தொடர்பாக முஷாரப் மீது விசாரணை நடத்தும்படி உச்சநீதிமன்றத்தை சட்ட அமைச்சகம் கேட்டுக்கொண்டதால் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது.
நாட்டின் ராணுவத்தை பலவீனப்படுத்திடும் நோக்கத்தில் முஷாரப் மீது வழக்கு தொடர அரசு முடிவு எடுத்துள்ளதாக முஷாரபின் செய்தித்தொடர்பாளர் குற்றம் சாட்டியுள்ளார்.