ஜமாத் இ இஸ்லாமி தலைவரை தூக்கிலிட நீதிமன்றம் தடை

ஜமாத் இ இஸ்லாமி தலைவரை தூக்கிலிட நீதிமன்றம் தடை
Updated on
1 min read

வங்கதேசத்தின் மிகப் பெரிய இஸ்லாமிய கட்சியான ஜமாத் இ இஸ்லாமியின் தலைவர் அப்துல் காதர் முல்லாவுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் நேற்று முன்தினம் கடைசி நேரத்தில் நிறுத்தி வைத்தது.

1971ல் நடைபெற்ற வங்கதேச விடுதலைப் போரில், பாகிஸ்தான் ராணுவத்துடன் சேர்ந்து போர்க் குற்றங்களில் ஈடுபட்டார் என்பது அப்துல் காதர் முல்லா மீதான குற்றச்சாட்டு. இதனை விசாரித்த போர்க் குற்றங்கள் தீர்ப்பாயம் முல்லாவுக்கு கடந்த பிப்ரவரி 5ம் தேதி ஆயுள் தண்டனை விதித்தது. இத் தீர்ப்பின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த வங்கதேச உச்ச நீதிமன்றம், கடந்த செப்டம்பர் 17ம் தேதி இத் தண்டனையை மரண தண்டனையாக உயர்த்தியது. இதைத் தொடர்ந்து போர்க் குற்றங்கள் தீர்ப்பாயம் சார்பில் முல்லாவை தூக்கிலிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து அவரை தூக்கிலிடுவதற்கான ஆயத்தப் பணிகள் நேற்று முன்தினம் தொடங்கின. முல்லாவை அவரது குடும்பத்தினர் மாலையில் சந்தித்தனர். நள்ளிரவு 12 மணிக்கு முல்லாவை சிறை அதிகாரிகள் தூக்கிலிட இருந்தனர்.

இந்நிலையில் உச்ச நீதிமன்ற நீதிபதி சையது மகமுது உசேனை அவரது இல்லத்தில் அணுகிய முல்லா வழக்கறிஞர்கள், தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கு இடைக்கால தடை பெற்றனர். சட்ட நடைமுறைகளை பூர்த்தி செய்யாமல் முல்லாவை தூக்கிலிட அரசு தயாராகி வருவதை எதிர்த்து மனு தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து முல்லா தூக்கிலிடப்படுவதற்கு 2 மணி நேரம் முன்னதாக தடை விதிக்கப்பட்டது.

மேலும் முல்லா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு மனு மீது வியாழக்கிழமை விசாரணை நடைபெறும் என்றும் மறுஉத்தரவு வரும்வரை தண்டனையை நிறைவேற்ற தடை விதிக்கப்படுவதாகவும் அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இதனிடையே வங்கதேசத்தில் சில இடங்களில் முல்லாவுக்கு ஆதரவாக ஜமாத் இ இஸ்லாமி மற்றும் அக்கட்சியின் மாணவர் அணி நேற்று முன்தினம் இரவு நடத்திய போராட்டங்களில் வன்முறை வெடித்தது. இதில் 5 பேர் கொல்லப்பட்டனர். 15 பேர் காயமடைந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in