

டல்லாஸில் மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்ட 5 போலீஸாரின் குடும்பத்தினருக்கு இந்திய வம்சாவளியினர் 60 ஆயிரம் அமெரிக்க டாலர் நிதியுதவி வழங்கி உள்ளனர்.
அமெரிக்காவின் டல்லாஸ் மாகாணத்தில் கறுப்பின இளைஞரை வெள்ளை இன போலீஸார் சுட்டுக் கொன்றார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து டல்லாஸில் சமீபத்தில் போராட்டம் நடந்தது. அப்போது, மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியதில், போராட்டத்துக்கு பாதுகாப்பாக வந்த 5 போலீஸ் அதிகாரிகள் பலியாயினர்.
இந்நிலையில், இந்திய வம்சா வளியை சேர்ந்த அமெரிக்கர்கள் 60 ஆயிரம் அமெரிக்க டாலர்களை திரட்டி, பலியான 5 போலீஸாரின் குடும்பத்தினருக்கும் நேற்று நிதியுதவி வழங்கினர். அதற்கான காசோலையை டல்லாஸ் மேயர் மைக் ராவ்லிங் மற்றும் டல்லாஸ் போலீஸ் தலைவர் டேவிட் புக்கெஸ் ஆகியோரிடம் ஏ.கே.மகோ தலைமையில் இந்திய வம்சாவளியினர் ஒப்படைத்தனர். டல்லாஸில் அமெரிக்க இந்திய வர்த்தக சேம்பரின் தலைவராக ஏ.கே.மகோ இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த நிகழ்ச்சியின் போது, “இந்திய வம்சாவளியினருக்கு மேயரும் போலீஸ் துறையும் அளித்து வரும் பாதுகாப்பை பாராட்டுகிறோம். தினமும் எங்கள் பாதுகாப்புக்காக நீங்கள் எடுக்கும் நடவடிக்கைகளை நாங்கள் கவுரவிக்க விரும்புகிறோம்” என்று மகோ கூறியதாக டல்லாஸ் மார்னிங் நியூஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இந்திய வம்சாவளியின் பரந்த மனப்பான்மையையும் உதவும் உள்ளத்தையும் மேயர் ராவ்லிங் மிகவும் பாராட்டி உள்ளார்.